நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை

அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நெருக்கடிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிட்டால், பதவி விலகுவேன் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்ந்தால், நாளாந்தம் 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தொலைக்காட்சிகள் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை கொள்வனவு செய்வதை மக்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறான நிதிகள் பயன்படுத்தப்படுவதால் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களது வருமானத்தை உத்தியோகப்பூர்வ முறைமூலம் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.