திருமலை தனியார் வைத்தியசாலையில் ETU பிரிவு சரியான முறையில் செயற்படாமையால் ஒருவர் உயிரிழப்பு;  குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுர சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ETU அவசர முதலுதவி பிரிவு உரியமுறையில் இயங்காமையினால் ஒருவர் உயிரிழந்ததாகவும் இந்த உயிரிழப்புக்கு குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகமே காரணம் என குற்றம் சுமத்தி உறவினர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (08) ஒன்று கூடிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

கடந்த 2ஆம் திகதி திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில் மயக்கமுற்ற நிலையில் (34-வயது) நபரை குறித்த தனியார் வைத்தியசாலைக்கு அவசர முதலுதவி பிரிவுக்கு (ETU) அனுமதிக்க சென்ற போது குறித்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாது என திருப்பி அனுப்பப்பட்டமையினால் திருகோணமலை தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்

மேலும் இவ்வாறு உயிரிழந்த குறித்த நபர் உயிரிழந்தமைக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில் இன்றைய தினம் (08) மரணத்திற்கான வைத்திய சான்றிதழ் உறவினர்களுக்கு கையளிக்கப்பட்ட போது குறித்த நபர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்

குறித்த தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து முதலுதவி செய்திருந்தால் குறித்த நபரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இவ்வாறு உயிரிழந்த நபரின் மரணத்திற்கு குறித்த தனியார் வைத்தியசாலையே காரணமெனவும் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்

மேலும் குறித்த வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காட்சி பலகையில் அவசர முதலுதவி பிரிவு (ETU) 24 மணித்தியாலமும் இயக்கத்தில் உள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த தனியார் வைத்தியசாலையில் அவ்வாறு அப்பிரிவு செயற்பாட்டில் இல்லையெனவும் காட்சிப்படுத்தப்பட்ட நடைமுறையில் இல்லாத அனைத்து பிரிவுகளும் உடன் அகற்றப்பட வேண்டும் எனவும் குறித்த தனியார் வைத்தியசாலை மக்களை சிரமங்களுக்குள்ளாக்குவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்

குறித்த தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவ்விடத்திற்கு சமூகமளித்த உப்புவெளி பொலிஸார் வைத்தியசாலை நிர்வாகத்துடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறித்த வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்ட நடைமுறையில் இல்லாத அனைத்து பிரிவுகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து வைத்தியசாலை நிர்வாகத்தினரினால் அனைத்து பிரிவுகளும் காட்சி பலகையில் இருந்து முற்றாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.