முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் வாழ்க்கை குறிப்புக்கள் அடங்கிய ” அரசியல் அறம் ஏ.ஆர்.எம்” நூல் வெளியீடு

(நூருல் ஹுதா உமர்)

டாக்டர் எஸ்.நளீமுடீன் எழுதிய “அரசியல் அறம் A.R.M” கவிதை நூல் வெளியீடும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் வெள்ளிக்கிழமை (6) ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபகத் தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுடீன் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூல் ஆய்வுரை வழங்கியதுடன் அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மன்றத் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா மற்றும் இஸ்லாமிய ஆசிரியர் சங்க தலைவரும் எழுத்தாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம். மூஸா, கவிதாயினி டாக்டர் புஸ்பலதா லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நூலின் முதற்பிரதியை மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் பாரியார் சுஹாரா மன்சூர் பெற்றுக்கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் டி.ஜெ அதிசயராஜ், சாய்ந்தமருது ஜும்மாப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், கலை, இலக்கிய, ஊடக பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட முன்னாள் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் நவீன தொழினுட்பத்தின் வாயிலாக வாழ்த்து செய்தியை தெரிவித்தனர்.