நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக சுயாதீன அணி சஜித்திற்கு கடிதம்.

அரசிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக அரசில் இருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுயாதீனக் குழு சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில்;

ஐக்கிய மக்கள் சக்தியினால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம்.
நீண்ட காலம் முழு இலங்கையும் பின்பற்றிய தவறான பொருளாதாரக் கொள்கை,தவறான பொருளாதார முடிவுகள்,ஊழல்,செயலற்ற தன்மை ,வீணடிப்பு போன்ற காரணங்களால் நிரம்பியிருந்த பொருளாதார நெருக்கடி தற்போதைய அரசினால் பின்பற்றப்பட்ட தன்னிச்சையான வேலைத்திட்டங்கள் காரணமாக தீவிரமானதுடன் நெருக்கடியை மீட்பதற்கு தற்போது வரை எந்தவொரு பயனுள்ள வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதனால் தற்போதைய அரசு விலக வேண்டும் எனவும் அவ்வாறு விலகாவிட்டால் விலக்க வேண்டி வரும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.
நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசினை விலக்க எதிர்பார்த்திருப்பீர்களாயின் அரசினை வெளியேற்றிய பின் நாட்டை ஆட்சி செய்யும் நடைமுறை சம்பந்தமாகவும் நீங்கள் திட்டமொன்றை வைத்திருக்க வேண்டும். அரசற்ற நாடு அராஜகமான மோசமான நிலையை ஏற்படுத்தும்.

அந்தவகையில் அரசினை வெளியேற்றிய பின் முன்னெடுப்பதற்கான மாற்று யோசனை இரண்டினை தங்களுக்கு முன்வைக்கிறோம். அதாவது

01-தலைமை பீடாதிபதிகள்,பிரதான மத தலைவர்கள்,வியாபார அமைப்பு,இளைஞர் செயற்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட எம்மால் தெரிவிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசுக்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தல்.

02-ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஆட்சி முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு விருப்பமில்லாதவிடத்து நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி அரசினை ஏற்றுக்கொள்ளல்.

நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி கண்ட பின் தாங்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு தெரிவுகளில் எதிர்பார்க்கும் தெரிவு எது என்பதனையும் கூடியவிரைவில் எமக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என சுயாதீன அணி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளது.மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களது கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.