மக்கள் பாவனைக்காக அரசியல்வாதிகளினால் திறக்கப்பட விருந்த பூங்கா ஆர்ப்பாட்டக்காரர்களால் திறந்து வைப்பு

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டு அரசியல்வாதிகளினால் திறந்து வைக்கப்படவிருந்த பூங்கா ஆர்ப்பாட்டக்காரர்களால் திறந்துவைக்கப்பட்டது.

திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஒன்றே இன்று (06) குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தின் கீழ் 100 நகர அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மென் ஓட்டப்பந்தய திட்டம் பொதுப் பூங்கா ஒன்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில யுவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நகர அபிவிருத்தி கழிவுப் பொருள் வெளியேற்றம் மற்றும் துப்புரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் 59.95 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பூங்கா இன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பூங்காவானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட இருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு இருந்ததுடன்,

மேலும் மக்கள் பாவனைக்காக ஆர்ப்பாட்டக்காரர்களினால் திறந்து வைக்கப்பட்ட பூங்காவின் நடுவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரியூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.