நாடுதழுவிய ஹர்த்தாலுக்கு திருமலையிலும் ஒத்துழைப்பு : 10 கிலோ மீட்டர் தூரம் நடைபவணி – ஆளுனர் அலுவலகம் முற்றுகை….

(ரவ்பீக் பாயிஸ்)

நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து திருகோணமலையிலும் பூரண ஹர்த்தால் இன்று (06) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை நகரின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு சில இடங்களில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

திருகோணமலை நகரில் அனைத்துபாடசாலைகளும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அரச மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் சேவையில் ஈடுபட வில்லை என்பதுடன்

திருகோணமலை நகரம் மூன்றாம் கட்டை , மட்கோ,அபயபுர போன்ற பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்பு மத்திய நிலையம், சிவில் அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் ஹர்த்தால் ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட நடைபவனி 04ம் கட்டை சந்தி பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஆண்டாங்குளம், அனுராதபுர சந்தி, அபய புரம், இலிங்க நகர் பிரதான வீதி ஊடாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை குறித்த நடைபவனி சென்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பா அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண மக்கள் குரல்கள் அமைப்பின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர இவ்வாறு கருத்து தெரிவித்தார்

இன்றைய தேசிய ஹர்த்தால் தினம் மிகவும் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம் மக்களை அதி உச்சத்தில் வைத்து வதைத்துக் கொண்டிருக்கின்றது மீண்டும் நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய கலாச்சாரம் உருவாகியுள்ளது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மேலும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின் வெட்டுக்கான நேரம் கூட மேலும் அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இவ்வாறான சூழ்நிலையில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் இன மத மொழி பேதமின்றி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்ற நிலையில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி எனும் போர்வையில் அரசுக்கு ஆதரவு அளித்துவரும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றி தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தில் தொடர்பிலும் மும்முரமாக இருப்பதையிட்டு நாங்கள் மிகவும் கவலை அடைகிறோம் என கிழக்கு மக்கள் குரல்கள் அமைப்பின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்

மேலும் மக்களின் குறிக்கோளாக இருக்கின்ற தற்போதைய ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் தரப்பினர்களும் வீடு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கோலோடும் ஒரே கூச்சலோடும் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்ற வேலைகளில் அரசாங்கம் கேலியாகவும் வினோதமாகவும் நடந்து கொள்வதை விட்டுவிட்டு மக்களின் ஆணைப்படி வீடு செல்ல வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்

குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது