எயார் பஸ் கொள்வனவில் சமல் ராஜபக்ஸவின் மகனுக்கும் தொடர்பு!

எயார் பஸ் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு நல்லாட்சி எனப்படுகின்ற அரசாங்கம் அதிக முயற்சி மேற்கொண்டது எனவும் அதனை இரத்து செய்வதற்காக 115 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்துதல்’ எனும் தலைப்பில் கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையும் பிரான்ஸ் எயார் பஸ் நிறுவத்திடம் எயார் பஸ்களை கொள்வனவு செய்த உடன்படிக்கை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள சமல் ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே நடைபெற்றது.

சமல் ராஜபக்ஸவின் மகனும் அதன் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்தார். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்வனவே இது.

இந்த கொள்வனவின் போது A330 ரக விமானங்களை விநியோகிப்பதற்கு ஒரு மில்லியன் டொலர் வீதமும் A350 ரக விமானங்களை விநியோகிப்பதற்கு 1.16 மில்லியன் டொலர் வீதமும் குத்தகைக்கு பெறப்படும் நான்கு விமானங்களுக்காக 3 இலட்சம் டொலர் வீதமும் கப்பம் செலுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

மொத்த கப்பம் 16.18 மில்லியன் டொலராகும். விசாரணைகள் தொடர்ந்தபோது இந்த 16 மில்லியன் டொலரும் கிடைக்கவில்லை. காரணம் அரசாங்கம் கவிழ்ந்தபோது 2 மில்லியன் டொலர் முற்பணம் மாத்திரமே செலுத்தப்பட்டிருந்தது.

அந்த இரண்டு மில்லியன் டொலர் முற்பணம் புரூணையில் உள்ள அப்போதைய எயார் லங்காவின் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்தது.

புரூணையில் இந்த இரண்டு மில்லியன் டொலரும் அவுஸ்ரேலியாவில் உள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டது.

அவுஸ்ரேலிய வங்கிக் கணக்கில் இருந்து இலங்கையிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் ஒரு வங்கிக் கணக்கின் உரிமையாளரே நிமல் பெரேரா.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.