தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சிலாபம் பிரதிமேயர் நன்றி தெரிவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கை திருநாட்டின் தமிழ் பேசும் தமிழ் – முஸ்லிம் உறவுகளுக்கு தாங்கள் காட்டும் பாசத்துக்கும் எனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து எழும் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன் என சிலாபம் நகரசபையின் பிரதி மேயர் சட்டத்தரணி அ.வ.சாதிக்குல் அமீன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேரன்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே!

முதற்கண் தங்களது பேரன்புக்கும் எமது இலங்கை திருநாட்டின் தமிழ் பேசும் தமிழ் – முஸ்லிம் உறவுகளுக்கு தாங்கள் காட்டும் பாசத்துக்கும் எனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து எழும் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். தமிழ் பேசும் உறவுகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களது உலகளாவிய தலைவர் தாங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ் பேசும் உறவுகள் சிறுபான்மையாக வாழக்கூடிய ஈழத் திருநாட்டிலே, உலகளாவிய முஸ்லிம்களால் நோற்கப்படுகின்ற புனித ரமழான் மாத நோன்பு இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் உறவுகளினாலும் நோக்கப்படுகின்றது. இக்கால கட்டத்திலே, பல்வேறு பொருளாதார நெருக்கடி, கொவிட் – 19 பின்னரான வருமான இழப்பு, அரசியல் ஸ்திரத் தன்மை இன்மை என பல்வேறு இன்னல்களை இலங்கை வாழ் மக்கள் அனுபவித்து வருகின்றமையை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் புனித நோன்பை நோற்றுக் கொண்டிருக்கும் இலங்கை திருநாட்டின் இஸ்லாமிய உறவுகள் சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து இந்த நோன்பை நோற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது பொருளாதார பின்னடைவுகளைக் கருத்திற்கொண்டு இஸ்லாமிய தமிழ் பேசும் மக்களுக்கு புனித ரமழான் மாதத்திற்கு உடனடியாகத் தேவைப்படுகின்ற உலர் உணவுப் பொருட்கள், புத்தாடைகள், பேரீத்தம் பழங்கள் போன்றவற்றை தாங்கள் தந்துதவுமாறு தமிழ் பேசும் முஸ்லிம் சார்பாக மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்.

என்னுடைய தாய் தந்தையை ஈன்றெடுத்த தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் மற்றும் உச்சிப்புளி கிராமங்களில் எமது சொந்த பந்தங்களைக் கொண்டுள்ளோம். தாங்கள் உடன்பிறப்புக்களாய் இருக்கும் தமிழக உறவுகளைப் போல எம் மக்களையும் ஏற்று எமது மக்களுக்கு நிவாரண உதவிகளைத் தந்து உதவுமாறு தயவுடன் வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.