இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தற்போதைய அரசாங்கம் எமது நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது – சஜித்

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையானது மிகவும் துயரமான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தருணத்தில் மே தினத்தை கொண்டாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்காக 136 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று மே தினம் என்று அழைக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக தற்போதைய அரசாங்கம் எமது நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது என பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இயலாமை, தோல்வி, தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் கொடுங்கோல் ஆட்சியின் ஆணவம் போன்றவற்றால் நாடும் எதிர்கால சந்ததியும் வரலாறு காணாத சவாலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் அச்சமோ, சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழலை உருவாக்கத் தவறிய தற்போதைய அராஜக ஆட்சியானது அரச பயங்கரவாதத்தையே தனது வாழ்வாதாரமாக மாற்றியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.