கிழக்கு மாகாணத்தில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

(ரவ்பீக் பாயிஸ்)

தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் உற்பத்தி நெருக்கடி முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்றது. கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து தேசிய மின் சக்தியில் இணைத்துக் கொள்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (28) திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க அதேபோன்று kapital crop international pvt ltd,orb touch cc pvt ltd ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

தேசிய மின்சக்திக்கு 100 மெகாவாட் மின்சக்தியை இதன் மூலம் இனைத்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன் 120 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் 20 வீதமான வருமானத்தை கிழக்கு மாகாண சபைக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமையும். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள கிழக்கு மாகாண சபைக்குரிய நிறுவனங்கள் இது தொடர்பில் கருத்தில் கொள்ளப்பட்டு கட்டம் கட்டமாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

நாடு தற்பொழுது உள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் உற்பத்தி செய்வதற்காக வேண்டி எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பல மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டியியுள்ளது. சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதனாது சூழல் நேயமிக்க ஒரு செயற்பாடாக அமையும். அத்துடன் புதிய தொழில் வாய்ப்புக்களும் இதன் மூலம் ஏற்படும்.பாடசாலைகள், வைத்தியசாலைகளும் இதற்காக கருத்திற்கொள்ளப்படும். இவ்வேலைத்திட்டம் மூலம் வெளிநாடுகளுக்கு நிலங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது. இலங்கை நிறுவனங்களே இதனை நடைமுறைப்படுத்தும். நாட்டுக்கு அவசியமான முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தணிய முடியும் என தாம் நம்மபுவதாக ஆளுநர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமைை குறிப்பிடத்தக்கது