சிமெந்து, அரிசிமூடை, எரிவாயு, பாண் உள்ளிட்ட பொருட்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்.

(ரக்ஸனா)

சிமெந்து, அரிசிமூடை, மண்ணெண்ணைக் கலன், எரிவாயு, பாண் உள்ளிட்ட பொருட்களுடன் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்கள் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை முன்பாக கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை(28) ஈடுபட்டிருந்தனர். தவிசாளர், பிரதித் தவிசாளர், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். எனினும் அப்பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர்விடுதலைக் கூட்டணி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதன்போது கலந்து கொண்டிருக்கவில்லை.

மக்கள் படும்பாடு மனம்மாறாத அரசே மக்களுக்குத் தீர்வைத்தா, வரிசை வரிசை உயர உயர விலை, வாழணுமா சாகணுமா சொல்லங்க, விவசாய உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, வதைக்காதே வதைக்காதே மக்களை வதைக்காதே, நாளுக்குநாள் விலை அதிகரிப்பு, மக்கள் சாவதா, பெற்றுத்தா பெற்றத்தா தீர்வினைப் பெற்றுத்தா, வயலுக்கு உரமுமில்லை, வயிற்றுக்குச் சோறுமில்லை, அடுப்பு எரிக்க கேஸ் இல்லை உடுப்புக் கழுவ சோப் இல்லை, கரண்டுமில்லை, டொலருமில்லை, மருந்துமில்லை, மயக்க மருந்துமில்லை, அதியாவசியப் பொருட்களின் அதிரடி விலையேற்றத்தைக் குறை, பாணும் விலை, பருப்பும் விலை, மாவும் விலை, மஞ்சளும் விலை, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.