கேலிக்கூத்தான வீதித் தடைகள் மூலம் போராட்டங்களை தடுக்க முடியாது: நிரந்தர வீதித் தடைகளை அகற்றவும் – சஜித்

சுமார் இரு வாரங்களுக்கு மேலாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை நான்கு சுவர்களுக்குள் மக்கள் அடைத்துவைத்துள்ளனர்

நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம், தற்போது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மக்களுக்கு எதிராக அழுத்தங்களையும் ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், கொழும்பு கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதிகளை மறித்து நிரந்தர வீதித் தடைகளை இட்டுள்ளமை அதன் ஒரு செயற்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார்.

லோட்டஸ் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையினால் வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசிப்பதற்கு வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பல போராட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் அரசாங்கம் அச்சத்தில் இருப்பதுடன் இந்த கேலிக்கூத்தான வீதித் தடைகள் மூலம் மக்களின் போராட்டங்களை தடுக்கமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டின் அங்கத்தவர்களாகவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதற்கு இருக்கும் உரிமையை அரசாங்கமோ அல்லது வேறு எந்த சக்தியினாலும் மீற முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

சுமார் இரு வாரங்களுக்கு மேலாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைப்பதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.