அன்னைபூபதி நினைவுத்தூபிக்கு சென்ற அரியநேத்திரன் கையில் இருந்த கற்பூரத்தை தட்டிவிட்ட பொரிசார்

அன்னைபூபதியின் 34,ம் ஆண்டு நினைவு 19/04/2022, அவரின் கல்லறை அமைந்துள்ள மட்டக்களப்பு நாவலடி கடல்கரை ஓரம் அஞ்சலி செலுத்த சென்ற போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் கைகளிலிருந்த கற்பூரத்தை தட்டுவிட்ட காவல்துறையினர் அவர்களை அங்கிருந்துசெல்லுமாறு கடும் தோனியில் அச்சுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக அங்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர் அங்கு குழுமி இருந்த காத்தான்குடி பொலிசாருடன் சிறிது நேரம் வாய்த்தர்கத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக அன்னை பூபதியின் உறவினர்கள், அவரது நினைவிடத்திற்கு சென்று நினைவுக்கூருவதை தவிர்த்துள்ளனர்.

இதேவேளை நினைவிடத்திற்கு சென்றவர்களை அங்கிருந்த சிறிலங்கா காவல்துறையினர் எச்சரித்து வெளியேற்றிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமைதிகாக்கும் படையணி என்ற பெயரில் தமிழர் தாயகத்திற்குள் நுழைந்திருந்த இந்தியப் படையினர் மேற்கொண்ட கொடூரங்களை அடுத்து இந்தியப் படைகளை வெளியேறுமாறு வலியுறுத்தி 1988 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி அன்னை பூபதி ஆகாரமின்றி போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

இந்தப் போராட்டத்திற்கு இந்திய அரசினால் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில் ஏப்ரல் 19 ஆம் திகதி தியாக தீபம் அன்னை பூபதி உயிர் நீத்திருந்தார்.
மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர ஆலயத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயக மக்களின் வீடுகளிலும் புலம் பெயர் தேசங்களிலும் நினைவுக்கூரப்படுகின்றது.
எனினும் இம்முறையும் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது சமாதியில் நினைவேந்தல்களை நடத்துவதற்கு காவல்துறையினர் நீதிமன்ற தடையை பெற்றுள்ளனர். அன்னை பூபதியின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டாம் என காத்தான்குடி காவல்துறையினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணாக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ.பிரசன்னா, இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணி தலைவர் லோ.திபாகரன், சிவில் அமைப்பு தலைவர் ச.சிவயோகநாதன், வாழைச்சேனை குணசேகரம் ஆகிய 11, பேருக்கு எதிராக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.