3 நாட்களிற்கு கான்களில் எரிபொருள் வழங்கப்படாது-சட்டவிரோதமாக எரிபொருளை அதிக விலைக்கு விற்றவர்கள் கைது

(பாறுக் ஷிஹான்)

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பெற்றோல் மற்றும் டீசல் கான்களுக்கு விநியோகிப்பது இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஏப்ரல் 12,13, 14 ஆகிய திகதிகளில் கான்களில் எரிபொருள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படவில்லை.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்புடன் மேற்படி எரிபொருள் நிலையங்களில் பொதுமக்கள் கிரமமாக பெற்றோல் டீசல் மண்ணெய் ஆகிய எரிபொருட்களை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது

மேலும் விவசாயத்திற்கு தேவையான டீசல், பெற்றோல் போன்றவற்றை குறித்த பிரதேசத்தின் கமநல பரிசோதனை உத்தியோகத்தர் அல்லது கிராம உத்தியோகத்தரின் சான்றிதழுடன் நிரப்பு நிலையத்தில் சமர்ப்பித்து கான்களில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தவிர சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து, விற்பனை செய்பவர்களை தேடி சோதனை நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.கல்முனை ,பொத்துவில், சவளக்கடை ,சம்மாந்துறை ,மத்தியமுகாம் ,பொலிஸ் நிலையங்களில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

இதன் பொது கல்முனை ,பொத்துவில் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 10 சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு குறித்த சட்டவிரோத எரிபொருள் விற்பனை தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மக்களை கேட்டுள்ளனர்.

மேலும் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறியும் விசேட நடவடிக்கை தொடர்ச்சியாக நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே எரிபொருளைச் சேமித்து விற்பனை செய்ய அனுமதியிருப்பதால்இ எரிபொருளை தனியாரிடம் வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவித்தனர்.

கான்கள், பீப்பாய்கள், போத்தல்கள் மற்றும் ஏனைய கொள்கலன்களில் பொதுமக்கள் எரிபொருளை கொள்வனவு செய்வதை அவதானிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனnடுக்காமையின் காரணமாக பலர் இந்த மெத்தனத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

இது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மாறியுள்ளது. அத்தகைய நபர்கள் அதிக லாபம் ஈட்டும் வகையில் எரிபொருளை மீண்டும் விற்பனை செய்கின்றனர் .இதனால்வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் வரிசையில் நிற்பவர்கள் இவ்வாறான செயற்பாடுகளால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே பொதுமக்களின் தேவைக்கு போதுமான எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தேவையான அளவு கான்கள் மற்றும் போத்தல்களில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.