30வருடங்களின் பின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் கற்கைகள் துறை’

30    வருடங்களின் பின் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் புதிய துறையாக ‘தமிழ் கற்கைகள் துறை’ நிறுவப்பட்டிருக்கின்றது.

1991 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீடம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மொழித் துறையும் ஆரம்பிக்கப்பட்டது. இத்துறையில் தமிழ்,  ஆங்கிலம் ஆகிய இரு பிரிவுகள் இயங்கிவந்தன. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மொழித்துறையினுள் இயங்கி வந்த தமிழ் பிரிவு தற்போது ‘தமிழ் கற்கைகள் துறை’  என்ற பெயரில் புதிய துறையாக நிறுவப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்துறை கடந்த 06.04.2022 ஆம் திகதி புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மொழித் துறையின் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய துறையைத் திறந்து வைத்துள்ளார். கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்  ஜீ.கென்னடி  சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

மொழித்துறையின் முதலாவது தலைவராகக் கடமையாற்றிய பேராசிரியர் சி. மௌனகுரு மொழித்துறையில் ஆரம்ப காலம் முதலாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு,  பேராசிரியர் செ. யோகராசா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர்  அ. பகிரதன்,  நிதியாளர், எம்.எம். மொஹமட் பாரீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்விலே கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள்,  துறைத் தலைவர்கள்,  சிரேஸ்ட விரிவுரையாளர்கள்,  விரிவுரையாளர்கள்,  சிறப்புக் கற்கை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.