(க.ருத்திரன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தினை இடை மறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தினை சேர்ந்த மக்களே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு விற்காக அதிகாலை முதல் காத்திருந்த மக்களுக்கு எரிவாயு கிடைக்கவில்லை.
நேற்று எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதினால் வெற்று எரிவாயு சிலிண்டர்களுடன் அதிகாலை 3 மணிமுதல் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் மதியம் வரை காத்திருந்தும் பலனின்றி போனது.
இதன்போது தங்களுக்கு முன்னால் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிய வாகனம் ஒன்றன் பின் ஒன்றாக கொழும்பில் இருந்து கல்முனைப் பகுதிக்கு சென்றுள்ளது. இதனை அவதானித்தவர்கள் தங்களுக்கு எரிவாயு கிடைக்கவில்லையே என ஆத்திரமடைந்து குறித்த வாகனத்தின் ஒன்றை வழிமறித்து போகவிடாமல் தடுத்து எரிவாயு வழங்குமாறு கேட்டுள்ளனர்.அதற்கு மறுப்பு தெரிவித்ததினால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
பொலிசார் தலையிட்டு வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்குள் கொண்டு சென்று பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஒன்று கூடிய மக்கள் பொலிசாருக்கு எதிராக தமது எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி எரிவாயு பெற்று தருமாறு கோரி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
எரிபொருள் சிலிண்டர்களை கொண்டு வீதியினை மறித்ததினால் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.வாகனச் சாரதிகள் மாற்று வழியினை தெரிந்தெடுத்து தமது பயணத்தினை மேற்கொண்டனர்.பொலிசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டம் கலவரமாக மாறக் கூடிய சூழ் நிலை நிலவியது.
கல்குடா,சந்வெளி,போன்ற பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிகமாக கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.
அத்துடன் விசேட அதிரடிப் படையினரும் வந்திருந்தனர். கலவரத்தினை கட்டுப்படுத்துவதற்கு பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்பாட்டத்தினை கட்டுப்படுத்த பிரதேச சட்டத்தரணி ,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொலிசார் இணைந்து ஆர்பாட்டக்காரர்களுடன் பல தடவை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக ஆர்பாட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. வழிமறிக்கப்பட்ட வாகனத்தில் உள்ள எரிவாயு சிலிண்டர்கள் கல்முனை பிரதேச மக்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இன்று (சனிக்கிழமை) முதற்கட்டமாக 300 எரிவாயு சிலிண்டர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 700 எரிவாயு சிலிண்டர்களையும் தாமே முன்னின்று பெற்றுத் தருவதாக ஆர்பாட்டத்தினை கைவிடுமாறு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒலி பெருக்கி மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது மதியம் 1 மணி வரை நீடித்தது. பின்னர் எரி வாயு சிலிண்டர் ஏற்றிய வாகனம் பாதுகாப்பாக பொலிசாரினால் அனுப்பி வைக்கப்பட்டது.