வசந்தகால நிகழ்வை குழப்பியவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

(தலவாக்கலை பி.கேதீஸ்)

நுவரெலியா கிரகரி வாவி கரையில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற நுவரெலியா ஏப்ரல் வசந்த கால நிகழ்வு ஆரம்ப வைபவத்தில் பலாத்காரமாக நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இடையூறு செய்த குழுவினருக்கு மிக விரைவில் நுவரெலியா பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர்கள் மாநகரசபை ஊழியர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நுவரெலியா மாநகரசபையின் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்த பொது கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தார்.

மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி, எதிர்கட்சி தலைவர் மஹிந்த தொடம்மே கமகே உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வசந்தகால ஆரம்ப நிகழ்வை குழப்பிய குழுவினருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள்.

அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து உரையாற்றுகையில், நுவரெலியா நகரம் ஒரு சுற்றுலா நகரம் இங்கு அதிகமானோர் சுற்றுலாத்துறையை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றார்கள். அதிலும் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்திலே அதிக வருமானம் தேடும் காலமாகும். ஏப்ரல் மாதத்தில் பெருந் தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தரும் பொழுது இங்குள்ள சுற்றுலா விடுதிகள் ஹோட்டல்கள் உரிமையாளர்களும் பழங்கள்,மரக்கறி வியாபாரிகள் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் ஒரு வருமானம் தேடும் மாதமாகும்.

இவ்வாறு நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக பொழுபோக்கிற்காக இங்கு பல கலை, கலாச்சார விளையாட்டு போட்டிகள், குதிரைப்பந்தய போட்டி, காரோட்டப்போட்டி,மலர் கண்காட்சி போட்டிகளை நடத்வதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா மாநகரசபையினர் செய்துள்ளனர். இதனை குழப்பியது நுவரெலியா சுற்றுலாத்துறையினரின் வயிற்றில் அடிக்கும் மிலேச்சதனமான செயலாகும்.

அதேவேளை இந்த ஆரம்ப நிகழ்வு ரூபவாஹினி தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இந்த நேரடி ஒளிபரப்பின் போது பாடசாலைகள் சிறுவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு தொலைகாட்சியில் நேரடியாக ஒளிப்பபரப்பட்டதை பெற்றோர்கள் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்த வேளை இந்த குழப்பக்கார குழுவினரால் தடையேற்படுத்தப்பட்டது.

அத்துடன் திடீரென இந்த குழப்பகார குழுவினர் வைபவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து கூச்சலிட்டவுடன் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அல்லோலப்பட்டு ஓடினார்கள் அதனை பார்பதற்கே கஸ்டமாக இருந்தது.

எனவே இதுவரையிலும் இவ்வாறான சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நுவரெலியா பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதையில் இறங்கி போராட வேண்டிவரும். யார் என்ன குழப்பமும் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஏற்கனவே திட்டமிட்டப்படி வசந்தகால நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.