மருதமுனை பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று (06) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து பொருட்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டி நேரிட்டுள்ளதுடன் சில மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன அரசாங்கம் உடனடியாக இதனை சீர் செய்ய வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் சுகாதாரத்துறை மிக மோசமாக பாதிக்கப் படுவதை தவிர்க்க முடியாததாக மாறிவிடும் எனவும் வைத்தியசாலை பணியாளர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே சுகாதார துறையை பாதிப்படையச் செய்யாமல் பொது மக்களுக்கு தேவையான சேவைகளை சீராக வழங்குவதற்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் ஏனைய வசதிகளை தங்குதடையின்றி அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் வைத்தியர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.