இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள ரணில் யோசனை!

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இது தனது அரசியல் வாழ்வில் இதுவரை கண்டிராத நெருக்கடியாகும் என்றும் அரசியல் பிரச்சினையைவிட பொருளாதார நெருக்கடியே மேலோங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களின் சுமையை குறைக்க அரசாங்கம் எப்படியாவது அந்நிய செலாவணியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் உயர் அதிகாரிகளுடன் தான் தொடர்புகொண்டதாகவும், அவர்களிடமிருந்து நிதி ஒத்துழைப்பு சாத்தியமானது என்றும் விக்ரமசிங்க கூறினார். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகியவற்றிலிருந்து மருந்துகளை வாங்குவது போன்ற அவசர மனிதாபிமான தேவைகளுக்காக குறுகிய கால கடன் வசதிகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நட்பு நாடுகளிடம் இருந்து நிதி உதவியைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அபிவிருத்திக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக நிவாரண வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரினார்.