தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் – சிறீதரன்

தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றியிடம்(Henry Donati) கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றிக்கும்

(Henry Donati) இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆகியோர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு தமிழர்கள் இந்த மண்ணிலே இறைமையோடுதான் வாழ்ந்தார்கள். பிரித்தானியாவினால்த்தான் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுதந்திரம் வழங்கிய பின்னர்தான் இலங்கை அரசினால் எமக்கான இறைமை பறிக்கப்பட்டது. ஆகவே பிரித்தானியாவிற்கும் பொறுப்பு இருக்கிறது எம்மை நாமே ஆளுகின்ற இறைமையுடன் கூடிய சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்துடன் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதையும் பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகலாமையையும் உறுதிப் படுத்த பிரித்தானிய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும் வடக்கு கிழக்கின் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி திண்டாடுகிறார்கள் அவர்களுக்கு தொழில் வழங்கக்கூடிய தொழிற்பேட்டைகளும் உருவாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.