நாட்டின் மேம்பாட்டுக்காக இலங்கையர்களாக ஒன்றிணைந்து பிராத்திக்க வேண்டிய நேரத்தில் நாம் பேரணிக்காக தயாராவது பிழையான தீர்மானமாக அமைந்துள்ளது : கலாநிதி அன்வர் முஸ்தபா

(நூருல் ஹுதா உமர்)

நாட்டினுடைய இன்றைய நிலை எல்லோருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் நாட்டில் சகல பாகங்களிலும் போராட்டம் நடப்பது நாமறிந்த விடயம். இந்த ராஜபக்ஸ அரசை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மை யானவர்கள் கடந்த 2005 முதலே எதிர்த்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. இப்படி இருக்க நாட்டில் பெரும்பான்மை இன மக்கள் போராட்டம் நடத்தும் போது அதில் நாம் பங்கெடுப்பதில் எமது சமூகத்திற்கு இருக்கும் ஆபத்தை விட நாம் தனியாக போராட்டம் நடத்தும் போது இருக்கும் ஆபத்து அதிகம் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் முஸ்தபா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் எமது நாட்டில் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த கசப்பான சம்பவங்களின் உண்மையான காரணங்களில் முதன்மையானது ராஜபக்ஸ எதிர்ப்பு வாதம் என்பதை அறியாதவர்களல்ல நாம். இலங்கை தேசத்தின் வளர்ச்சியில் பாரிய பங்காற்றிய முஸ்லிம் சமூகம் நசுக்கப்படும் சமூகமாக கடந்த காலங்களில் இருந்து வந்தமைக்கான காரணம் எமது தலைமைகளின் பிழையான தீர்மானங்களே என்பதை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

முஸ்லிம் சமூகத்தின் குரல்வளைகள் நசுக்கப்பட்ட போது, முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, புனித பள்ளிவாசல்களில் நாய்கள் மோப்பம் புடிக்க அழைத்து வரப்பட்ட போது, அப்பாவி இளைஞர்கள் வீண்பழி சுமந்த போது, முஸ்லிங்களின் சட்டங்களில் அதிகாரம் பாய்ந்த போது அமைதிகாத்த எமது தலைமைகள் இப்போது நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தனி அடையாளம் கொடுத்து தனியே முஸ்லிங்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகள் போன்று விம்பத்தை உருவாக்கி தனி முஸ்லிங்களின் போராட்டத்தை முன்னெடுப்பது இலங்கையில் வாழும் எதிர்கால முஸ்லிம் சந்ததிகளுக்கு ஆபத்தாக அமையும் என்பதை கடந்த கால வரலாறுகள் தெளிவாக எமக்கு எடுத்து காட்டியுள்ளது.

நாட்டின் மேம்பாட்டுக்காக இலங்கையர்களாக ஒன்றிணைந்து பிராத்திக்க வேண்டிய நேரத்தில் நாம் பேரணிக்காக தயாராவது பிழையான தீர்மானமாக அமைந்துள்ளது. என்னுடைய கருத்துக்களுக்கு சமூக வலைத்தள பாவனையாளர்கள் எதிர்காலத்தை கவனத்தில் கொள்ளாது கண்களை மூடிக்கொண்டு மனதில் பட்டதையெல்லாம் எழுதி தள்ளுவார்கள் என்பதை நன்றாக அறிந்தும் எமது சமூகத்தின் எதிர்கால நலனுக்காக இந்த பதிவை முன்வைத்துள்ளேன்.

சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவும் ஆபத்தை தரவல்லதாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொண்டு முஸ்லிம் தலைமைகள் சமூகத்தை சரியாக வழிநடத்த வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து நடக்க வேண்டும். நமது விரல்களை கொண்டு நாம் குத்திக்கொண்டு பின்நாட்களில் அழ முடியாது என்பதை எமது முஸ்லிம் சமூகம் சிந்தித்து நடக்க வேண்டும்.

இப்போது ஆட்சியை பிடிக்க வரிந்து கட்டிக்கொண்டு வீதிக்கு வந்தவர்கள் கடந்த பொழுதுகளில் முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்ட போது எவ்வாறு அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தார்களோ அப்படி முஸ்லிம் சமூகமும் இப்போது வேடிக்கை பார்க்க வேண்டியதே காலத்தின் தேவையாக அமைந்துள்ளது என்றார்.