இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே.விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சரும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தொலைக்காட்சி நேரலையில் உரையாற்றிய வீரவன்ச, தானும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் தற்போது பாராளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி.க்களாக அமர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

நீங்கள் இப்போது எதிர்க்கட்சி உறுப்பினராக உள்ளீர்களா என்று கேட்டதற்கு, “இன்னும் இல்லை” என்று வீரவன்ச பதிலளித்தார். எதிர்க்கட்சியில் சமகி ஜன பலவேகய, ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல அரசியல் கட்சிகள் இருப்பதாக அவர் கூறினார்.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே தமது நோக்கமாகும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தால் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்