ஆலையடிவேம்பில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் கடைப்பிடித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

(வி.சுகிர்தகுமார்)

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் உடனான விசேட கலந்துரையாடல் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவினர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படுவதற்கு பொலிஸ் திணைக்களத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து செயற்படுது தொடர்பில் ஆராயும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரதேச செயலாளர் தனது தலைமையுரையில் பொலிசாரும் பிரதேச செயலகமும் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். மேலும் சட்டம் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படுவதற்கு பிரதேச செயலகத்திற்கு பொலிஸ் திணைக்களம் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தானும் தனது பிரிவும் பொலிஸ் நிலையமும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த எவ்வேளையிலும் தயாராக உள்ளதாகவும் பிரதேச செயலகத்திற்கும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இதன் முதற்கட்டமாக வாரம் இரு நாட்களில் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் அமர்த்தவும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வாரம் இரண்டை தெரிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.