திருமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு

(ரவ்பீக் பாயிஸ்) 
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை (18) பாடசாலையின் அதிபர் அவர்களின் தலைமையில் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்
“இன்றைய கால கட்டத்தில் கல்வியின் தேடல் அதிகரித்துக் காணப்படுவதோடு, குறிப்பாக கொவிட் காலப்பகுதியில் வளர்ந்த நாடுகள் முற்றும் முழுதாக இணையவழிக் கல்வியிலேயே தங்கியிருந்தன.
குறித்த இணையவழிக் கல்வியில் எமது நாடும் உள்வாங்கப்பட்டிருந்தாலும் எல்லா மாணவர்களுக்கும் இவ்வாய்ப்புக்கள் கிடைத்திருக்கவில்லை. குறிப்பாக எமது கல்வி வலயத்தில் 81 பாடசாலைகளில் 62 வீதமான மாணவர்களே மேற்படி வசதிகளைப் பெற்றிருந்தனர். மீதமான 38 வீதமான மாணவர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இக்குறையினைத் தீர்க்கும் முகமாக கடந்த காலங்களில் நாம்  மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை அவர்களது வீடுகளுக்கே சென்று கொடுத்து நிறைவு செய்தோம். எனவே, இக்கற்றல் சாதனங்களை  மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படக் கூடியவாறு பாவித்தல் வேண்டும் என திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தெரிவித்தார்
இத்திறன் அறைக்கான காட்சிப் பெட்டியானது இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் அடங்கிய குடும்பம் (ஆதம்பாவா குடும்பம்)த்தினால் னால் வழங்கப்பட்டிருந்ததோடு, வலயக்கல்வி அலுவலகத்தால் இங்குள்ள கணனி அறை திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் கணனி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.