பெண்கள் சவால்களை மனப்பலத்தால் முறியடிக்க வேண்டும் – அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்

( வாஸ் கூஞ்ஞ)

பெண்களான எம்மை நோக்கி எந்த சவால்கள் வந்தாலும் எம்மிடம் உள்ள மனப்பலத்தால் நாம் அவற்றை முறியடிக்க வேண்டும்.
இந்த மனப் பலத்தால்தான் இன்று பல பெண்கள் பலவிதமான உற்பத்திப் பொருட்களின் பங்காளிகளாக மாறி வருகின்றனர் என மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் சர்வதேச பெண்கள் தினம் செவ்வாய்கிழமை (08.03.2022) பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் கொண்டாடியபோது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்

நாம் ஒவ்வொரு வருடமும் இவ் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வருகின்றோம். இதனால் எமக்கு என்ன பயன் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் இன்றைய தரவுகளைப் பார்க்கின்றபோது பெண்களின் முன்னேற்றங்களை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

தங்கள் சொந்த காலில் நின்று தங்கள் தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் கண்ட பெண்கள் இன்று சௌரவிக்கப்பட்டதை நாம் இங்கு கண்டுள்ளோம்.

மனித வாழ்வுக்காக ஒவ்வொருவரும் உற்பத்தி செய்தாலும் அல்லது கண்டுபிடித்தாலும் அவர்கள் சாதனையாளர்கள்தான்.

பெண் ஒரு ‘ரீ’ பக்கற் போன்றவள். தேயிலை ஒரு பக்கற்றுக்குள் அடைபட்டு இருக்கும்போது அதன் சுவை தெரியாது. ஆனால் அந்த தேயிலையை சுடு தண்ணீருக்குள் அமுழ்த்தி எடுத்து அதை தயாரித்து எடுத்து சுவைத்து பார்க்கும்போதுதான் அதன் சுவை எமக்கு புரியும்.

இவ்வாறுதான் பெண்களும் சமூகத்தின் மத்தியில் வரும்போதுதான் அவள் திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அதற்கும் அவள் பல சவால்களை சந்திக்க வேண்டியவளாகவும் இருக்கின்றாள்.

பெண்கள் ஒரு கழுகு போன்றவர்கள். ஏனைய பறவைகள் இரை தேடி வெளியில் வரும்போது மழை பெய்துவிட்டால் பாதுகாப்பு தேடி ஒதுங்கிவிடும்.

ஆனால் கழுகு அப்படியல்ல மழை பெய்தால் வான்நோக்கி உயர பறந்து மழை முகிழுக்கு மேலாகச் சென்று தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.

இவ்வாறுதான் எமது பெண்களும் இருக்க வேண்டும். பெண்களான எம்மை நோக்கி எந்த சவால்கள் வந்தாலும் எம்மிடம் உள்ள மனப்பலத்தால் நாம் அவற்றை முறியடிக்க வேண்டும்.

இந்த மனப் பலத்தால்தான் இன்று பல பெண்கள் பலவிதமான உற்பத்திப் பொருட்களின் பங்காளிகளாக மாறி வருகின்றனர்.

பெண்கள் தினம் என்றாலே பல பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகம். இது மாசி மாதத்தில் வரும் இவ் தினத்தடன் மறைந்து விடக்கூடாது. இவ் மகிழ்ச்சி எப்பொழுதும் திகழ வேண்டும்.

இன்று (08) காலை நான் ஒரு பெண்ணை சந்தித்தபோது அவள் தன் நம்பிக்கையில் இயற்கை உரத்தைப் பாவித்து மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட முடியாது என தெரிவித்த பயிர்களை உற்பத்தி செய்ததை தனக்கு காண்பித்தபோது நான் இந்த பெண்ணையிட்டு பெருமிதம் கொண்டேன்.

இன்று அரச திணைகளங்களை நோக்கும்போதும் எமக்கு ஒரு பெருமிதம். இன்று நாலில் மூன்று பங்கு பெண்களாகவே காணப்படுகின்றனர். இது தற்பொழுது அரசின் வலுவூட்டலும் ஒரு காரணமாக இருக்கின்றது.

இன்று எங்கு பார்த்தாலும் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டி வருகின்றனர்.

அத்துடன் பெண்கள் இன்றைய நிலையில் ஒவ்வொரு வீடுகளிலும் வீட்டுத் தோட்டத்திலும் தங்கள் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். இன்றைய பொருளாதார சிக்கலிலிருந்து விடுபடவும் பிள்ளைகளின் ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக் கொள்ளவும் வீட்டுத் தோட்டத்தில் அக்கறை கொள்ள வேண்டும். இதற்கான சகல உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என இவ்வாறு தெரிவித்தார்.