கலைஞர் சுவதம் நிகழ்வில் ஊடகவியலாளர் எம்.ஏ.முகமட் கௌரவிக்கப்பட்டார்

(ஹஸ்பர்)

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் கச்சக்கொடித்தீவை பிறப்பிடமாகவும்.றகுமானியா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர் முகம்மது அலி முகமட் நீண்ட காலமாக ஊடகப் பணியை செய்து வருகின்றார்.

பத்திரிகை மற்றும் இணையத்தளம் போன்ற ஊடகங்களில் 23 வருடங்களாக இவர் செயல் பட்டு வருகின்றார்.

பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் பத்திரிகைகளுக்கு கவிதை,கட்டுரை எழுதுதல் மற்றும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.மேலும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்கள் எழுதுதல்,போட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பற்றியுள்ளார்.

1999ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் தனது ஊர்ப் பிரச்சினைகளை செய்திகளாக எழுதி ஊடகத் துறைக்குள் இவர் நுழைந்தார்.

கிண்ணியாவிலிருந்து வெளி வந்த நேயம் பத்திரிகையின் பிதேச நிருபராக 2000ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றினார்.

தினச்சுடர் பத்திரிகையின் சிறந்த செய்தியாளராக அந் நிறுவனத்தினால் இவர் கௌரவிக்கப் பட்டார்.

2003ஆம் ஆண்டிலிருந்து நவமணி பத்திரிகையின் பிராந்திய நிருபராக கடமையாற்றி வருவதோடு விடி வெள்ளி மற்றும் மெட்ரோ லீடர் போன்ற பத்திரிகைகளிலும் இவர் செய்திகளை எழுதி வருபவர்.

இவர் இம்போர்ட் மிரர் இணையத் தளத்திலும் செய்திகளை எழுதி வருகின்றார்.

2014ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக. கலாசார அதிகார சபையினால் நடத்தப் பட்ட கலைஞர் சுவதம் வேலைத் திட்டத்ததின் கீழ் இவர் கௌரவிக்கப் பட்டார்.

திருகோணலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகிய சங்கங்களின் உறுப்பினராகவும் உள்ளார்.

கலாசார, இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சம்பியனாக இவர் தெரிவு செய்யப் பட்டார்.

ஊடகத்துறை அமைச்சு ,இலங்கை பத்திரிகைப் பேரவை மற்றும் இதர நிறுவனங்களால் நடத்தப் பட்ட ஊடக செயமர்வுகளில் இவர் பங்கு பற்றியுள்ளார்.

பொது அமைப்புகளில் பதவி வகித்து சமூக சேவைகளை புரிந்துள்ளார்.இவர் கலைப் பட்டதாரியாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.