அரசாங்கம் தனது மக்களின் கோரிக்கையை செவிமடுத்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் – சுமந்திரன் எம்.பி

(த.சுபேசன்)

அரசாங்கம் தன்னுடைய சொந்த மக்களது கோரிக்கையை செவிமடுத்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை கொடிகாமம் நகரில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி நாட்டின் பல பாகங்களிலும் சம நேரத்தில் கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்தப் போராட்டத்திற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் ஆதரவு கிடைக்கப்பெறுகின்றது. மக்களிடம் இருந்து எழும் கோரிக்கையாக இது காணப்படுகிறது.அரசாங்கம் தன்னுடைய சொந்த மக்களது கோரிக்கையை செவிமடுத்து இந்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

அத்துடன் ஜெனீவா கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அம்மையார் சமர்ப்பித்த அறிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியாகியிருந்தது .நாங்கள் அந்த அறிக்கையை வரவேற்கிறோம். அதற்காக அறிக்கை ஒன்று உத்தியோகபூர்வமாக என்னால் வெளியிடப்பட்டிருக்கிறது.அதிலே புதிதாக சில விடயங்களை அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார்.மிகவும் விசேடமாக நில அபகரிப்பு மோசமான விதத்தில் இங்கே இடம்பெறுவதாக தென்னன் மரபடி என்ற இடத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்கிற எங்களது கோரிக்கைக்கு ஆதரவாக தற்போது அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் திருத்தச்சட்டம் போதாது முற்றுமுழுதாக இது மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து உயர்ஸ்தானிகரது அறிக்கையில் வந்துள்ளது.

அதனை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அதனை வரவேற்று ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்.இதற்கான விரிவான எங்களது அறிக்கை ஒன்று வெகு விரைவில் வெளியிடப்படும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.