தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியிலே அரசியல் பயணத்தினை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றனர்- பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்

(எஸ்.சபேசன் சுதா)

தமிழ் இனம் இந்த நாட்டில் நிலையாக வாழவேண்டும் என்பதற்காகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியிலே எங்களது அரசியல் பயணத்தினை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றதே தவிர வேறு எந்தச் சலுகைகளையும் பெறுவதற்கு அல்ல என் தழிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைநீலாவணை வாழ் மக்களுடனான சந்திப்பொன்று இன்று 27 ஆம் திகதி ஞாற்றுக்கிழமை மாலை துறைநீலாவணை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து தலைமையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பானது மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் செயலாளர் க.சசிந்தரன் அவர்களது ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வுக்கு யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,இலங்கை வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
அவர் மேலும் பேசுகையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பானது மக்கள் நலன் சர்ந்தவிடயங்களை முன்னெடுக்குமே தவிர எவ்வித சலுகைக்காகவும் ஆசாபாசங்களுக்காகவும் தனிப்பட்ட நலனுக்காகவோ சோரம்போகக் கூடியவர்கள் நாங்கள் இல்லை.

இந்த நாட்டிலே அரசின் அடாவடித்தனங்களுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு யாரும் இல்லை இதனால் நாமே எதிர்த்து குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் தமிழ் மக்களின் உரிமையினை ஜனநாயகரீதியில் பெறவேண்டும் என்பதற்காக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை தமிழர்களினால் முன்னெடுத்த எழுச்சிப் பேரணி சர்வதேசத்தின் பார்வைக்கு எடுத்துச்சென்று இருக்கின்றது.

இதே போன்றுதான் கடந்த 3 ஆம் திகதியில் இருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்கக்கோரி கையெழுத்து சேகரித்து இச்சட்டத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சர்வதேசம் வரை எடுத்துச்செல்ல இருக்கின்றோம்.

இந்த பயங்கரவாதச் சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் அதிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமம் துறைநீலாவணைக் கிராமமாகும் இக்கிராமத்தில் வசித்தவர்கள்தான் எல்லைக்கிராமங்களில் குடியேறி வாழ்ந்த போது பயங்கரவாதத் தடைச் சட்டம் என்றபோர்வையில் குடியேற்றக் கிராமங்கள் அழிக்கப்பட்டதுடன் அங்கு வாழ்ந்த மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட வரலாறுகளும் நடந்தேறியுள்ளன. இருந்தும் இக்கிராமமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கி இருந்தமையால் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டு இருந்தனர் ஆனால் எதிர்காலத்தில் எமது அரசியல் தலைவர்கள் அபிவிருத்திகளை முன்னெடுப்பார்கள் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.