பயங்கரவாத தடைச் சட்டமே இந்த மண்ணில் தொன்னூராயிரம் விதவைகள் உருவாகக் காரணம்-சிறிதரன் எம்.பி காட்டம்.

(த.சுபேசன்) 

பயங்கரவாத தடைச் சட்டமே இந்த மண்ணில் தொன்னூராயிரம் விதவைகள் உருவாகக் காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

19/02 சனிக்கிழமை விழுது சமூக மேம்பாட்டு அமையத்தின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்ற “நீதிக்கான எங்களின் குரல்” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

அம்பிகா சற்குணநாதன் சில உரிமைகள் தொடர்பில்,தமிழர்களுடைய வாழ்வியல் தொடர்பில் எம்மோடு இணைந்து குரல் கொடுத்த காரணத்திற்காக இன்று இலங்கை அரசால் அவர் விமர்சிக்கப்படுகின்றார்.அரசாங்கம் ஒரு தனி நபருக்காக-ஒரு பெண்ணிற்கு எதிராக அறிக்கை விடும் அளவிற்கு இலங்கை மாறிவிட்டது. இது ஒரு நெருக்கடியான காலத்திற்குள் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதனை பறைசாற்றி நிற்கிறது.

இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.மின்சாரத் தடை,குடும்பப் பெண்கள் எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் வாங்க கியூவில் நிற்கும் நிலை உள்ளிட்ட பல நெருக்கடிகள் இலங்கையில் உள்ளன.சிங்கள மக்கள் இப்போது தான் அதை உணர்கிறார்கள். நாங்கள் முப்பது ஆண்டுகளாக இதனை எல்லாம் அனுபவித்தவர்கள்.ஒரு சவர்காரத்தை,எரிபொருளை கண் முன் காணாத நாட்களில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.

இங்குள்ள மக்களால் வாழ்வாதாரம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 2015-2019 காலப்பகுதியில் பல வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். கிராமங்களில் சிறிய கைத்தொழில் நிலையங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க வழிவகுத்திருந்தோம். தற்போதும் பல கோரிக்கைகள், கருத்திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

அத்துடன் மணல் அகழ்வு வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பரவலாக இடம்பெறுகிறது.இங்கிருந்து தென் பகுதிக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது.வேலியே பயிரை மேய்வது போன்று சம்பந்தப்பட்ட தரப்பு மணல் கடத்தலுக்கு உறுதுணையாக செயற்படுகின்றனர்.அவர்களுடைய வாகனங்களும் மணல் அகழ்வில் பங்காளர்களாக ஈடுபடுத்தப்படுகிறது.அதன் காரணமாகவே மணல் அகழ்வை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.ஆனால் இதனை இப்படியே விட்டுவிட முடியாது.சட்ட ரீதியாக இவ்விடயத்தை அணுக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

கௌதாரி முனை மண்ணினை சில அரசியல் பிரதிநிதிகள் கொள்ளையிட முயற்சித்த போது கிளிநொச்சி நீதிமன்றத்தில் சுமந்திரன் அவர்கள் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒன்றரை வருட காலமாக அங்கிருந்து ஒரு லோட் மணலை கூட ஏற்ற முடியாத அளவிற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏனைய இடங்களிலும் இவ்வாறு சட்ட அணுகல் மூலம் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.