காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதான பாலம் இடிந்து விழும் அபாயம்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட விபுலானந்த தேசிய பாடசாலைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள பிரதான பாலம் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இப்பாலத்தை தினசரி ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
காரைதீவு விபுலானந்த தேசிய பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் இவ்வீதியில் கனகரெட்ணம் விளையாட்டு மைதானம் , விதாதா வளநிலையம் , வீரபத்திரசுவாமி ஆலையம் , ஸ்ரீசித்தானைக்குட்டி ஆலயம் என்பன அமைந்துள்ளன.
காரைதீவு தோணாவிற்கு மேலான அமையப்பெற்றுள்ள இப்பாலம் சுமார் 50 வருடங்கள் பழைமை வாய்ந்த்து.பாலத்திற்குள் போடப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிவதோடு பாலத்தினூடாக வாகனங்கள் செல்லும் போது ஒருவிதமான அதிர்வும் ஏற்பட்டு எந்த நேரத்திலும இடிந்து விழக்கூடிய நிலைமையில் உள்ளது.

அண்மையில் இவ்வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டபோது பிரதேசவாசிகளினால் சம்பந்தப்பட்ட பொறியியலாளரிடம் இப்பாலம் சம்பந்தமாக எடுத்துக் கூறிய போதும் எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே தற்போது பழுதடைந்த பாலத்தை முற்றாக அகற்றி புதிய பாலமொன்றை அமைத்து தருமாறு பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.