தாக்கப்பட்ட ஊடகவியலாளரை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வை – நீதியான விசாரனை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு ஆலோசனை!!

வந்தாறுமூலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பஸ் தரிப்பிடம் ஒன்றை பிரதேச சபை சட்டபூர்வமாக அகற்றியிருந்த நிலையில், அதற்கு எதிராக இன்று (27) திகதி இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டமொன்று, திட்டமிட்டபடி இடம்பெறாத நிலையில் குறித்த பஸ்தரிப்பிடத்தை நிறுவிய குடும்பத்தினருக்கும் குறித்த கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று இரவே நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணையினை முன்னெடுக்குமாறு ஏறாவூர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த ஊடகவியலாளரை வைத்தியசாலையில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களை என்றும் மதிப்பவன் நான், கடந்த காலங்களில்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் நடாத்திய எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் நான்! அத்தோடு கடந்த ஆட்சியில் கல்குடா பகுதியில் நிறுவப்பட்ட எத்தனோல் தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான சசிகரன் மற்றும் நித்தியானந்தன் ஆகியோர் தாக்கப்பட்ட போது வீதி வீதியாக இறங்கி அவர்களுக்காக குரல் கொடுத்தது நானும் நான் சார்ந்த பிள்ளைகளுமே என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

குறித்த சம்பவம் தனிப்பட்ட ஒரு குடும்பத்தாரிற்கும் குறித்த கிராமத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ளதே தவிர, தாக்குதலை நடாத்தியதாக ஊடகவியலாளர் குறிப்பிடும் குறித்த கிராம அபிவிருத்தி சங்க உப தலைவர் எமது அலுவலக உத்தியோகத்தரும் கிடையாது, எமது கட்சியின் உறுப்பினரும் கிடையாது, அத்துடன் எனது உத்தியோகத்தர்கள் யாரும் அவரை குறித்த இடத்திற்கு அழைத்தும் வரவுமில்லை. ஊடகவியலாளர் தாக்கப்பட்ட அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த விடை
யத்தை பிழையான முறையில் திரிபுபடுத்தி, இதனை வைத்து யாரும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம் என இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.