பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

(அ . அச்சுதன்)

இலங்கையில் பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் இன்றைய காலகட்டத்தில் குற்றவியல் சட்டம் மாத்திரம் போதுமானது என்பதால் நாட்டில் தற்போது அமுலில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார்.

இன்று (24.02.2022) இடம்பெற்ற மூதூர் பிரதேச சபையின் அமர்வின்போது தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்றைய சூழலில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கான தேவை இல்லை. இச்சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே இதற்கான அழுத்தத்தினை அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அரசுக்கு வழங்கி இச் சட்டத்தினை இல்லாது ஒழிக்க வேண்டும். அதற்காக இச்சபையும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

இச்சட்த்தினை பயன்படுத்தி பலர் கைது செய்யப்பட்டு இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அண்மைக்காலமாக நூல் ஒன்றினை வெளியிட்ட இஸ்லாமிய இளைஞன் உட்பட முகப்புத்தகத்தில் பதிவுகளை பதிவேற்றிய பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலத்துக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த சட்டத்தினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். குறிப்பாக அப்பாவி இளைஞர்களுடைய எதிர்காலமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் 1979 ஆம் ஆண்டு இலங்கையில் தற்காலிகமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டு இன்றுவரை அமுலில் இருக்கின்றது. பொதுமக்கள் உட்பட சர்வதேசமும் இந்த சட்டத்தை எதிர்க்கின்ற போதும் பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் இன்னும் நீக்கப்படவில்லை.

இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கைதுசெய்யப்பட்டு மூன்று மாத காலத்துக்கு தடுத்து வைக்கப்படுவதோடு சம்மந்தப்பட்ட அமைச்சு சிபார்சு செய்யும்வரை 18 மாதம் வரை இந்த தடுப்பு நீடிக்கும். அதேவேளை இந்தச் சட்டம் நீதிமன்றத்தையே சவாலுக்கு உட்படுத்தும். எனவே இன்று இந்த சட்டத்தினூடாக மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

இலங்கையில் பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் இன்றைய காலகட்டத்தில் குற்றவியல் சட்டம் மாத்திரம் போதுமானது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினை இச்சபையினூடாக அரசுக்கு முன்வைப்பதாகவும் பயங்கரவாத சட்டத்தினை நீங்கக் கோரும் கையெழுத்துப் போராட்டத்துக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.