மீராவோடை வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கள விஜயம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஏ.எம்.நெளபர்,மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாகம், கல்குடா மீடியா போரம் உள்ளிட்ட எமது பிரதேச சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கெளரவ தவிசாளர் ஏ.எம். நெளபரினதும் எமது பிரதேச சிவில் அமைப்புக்களினதும் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன் நேற்று மாலை எமது மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தார்.

இதன் போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள்,ஆளணி பற்றாக்குறை, எமது பிரதேச மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக பிரதித்தலைவர் கே.பீ.எஸ்.ஹமீட் ,பதுருதீன் ஹாஜி,செயலாளர் மர்சூக் டையிலர்,எம்.எல்.சலாஹுதீன் உள்ளிட்ட நிர்வாகிகளினால் தெளிவாக செயலாளருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இங்கு மக்களுக்கு முடிந்தளவு சிநேகபூர்வமான வைத்திய சேவைகளை வழங்கி வருவதாகவும் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எஸ்.ஐ.மர்சூக் அவர்களினாலும் நிலைமைகள் தெளிவு படுத்தப்பட்டன.

இதன் போது வைத்தியசாலைக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் தாம் என்றும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

தவிசாளர் நெளபர் அங்கு கருத்து தெரிவிக்கையில் “தமது பிரதேச மக்கள் சாதாரண தொழில் துறைகளையே தமது அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகளாக மேற்கொண்டுவருகின்றனர் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற போதிய அளவு வருமானம் இன்மையினால் பல்வேறு கஷ்டங்களை அவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்நிலையில் ஒருவருக்கு சுகவீனம் ஏற்படுகின்றபோது தனியார் மருத்துவத்தை நாடுவது என்பது பாரிய சவாலாக உள்ளது.

இவ் வைத்தியசாலையில் ஏராளமான தமிழ், முஸ்லிம் மக்கள் சேவையை பெற வருகை தருவதாகவும் இவ் வைத்தியசாலையின் தேவைகள் கட்டாயம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு தேவையான சிவில் சமூகத்தின் உச்ச அளவிலான பங்களிப்புகளை தாம் வழங்குவதற்கு என்றும் தயாராக இருப்பதாக செயலாளரிடம் தெரிவித்தார்.

இதன் போது தவிசாளர் ஏ.எம்.நெளபரினால் விடைய முன்னெடுப்பு குழு சார்பாக செயலாளருக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.