இராணுவத்தினால் பொதுமக்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடமாடும் சேவை மட்டக்களப்பில் தொடர்ந்தும் முன்னெடுப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு கல்லடி 231வது இராணுவ படைபிரிவு உத்தியோகத்தர்களினால் பொதுமக்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு நகர் பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.

சுகாதார பகுதி உத்தியோகத்தர்களினால் பணி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இராணுவ உத்தியோகத்தர்கள் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களை நோய்தொற்றில் இருந்து பாதுக்காக்கும் நடவடிக்கையின் கீழ் பொதுமக்களுக்கான பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பு கல்லடி 231வது இராணுவ படை பிரிவின் நான்காவது வற்றலியன் கமுனு வொச் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதான தனியார் பேரூந்து பஸ்தரிப்பு நிலையத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களின் தடுப்பூசிக்கான அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது பைஸர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், இவ்வாறாக தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களிற்கு பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் ஊடாக கொவிட் 19 தொற்றில் இருந்து தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள முடியுமொன மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.