ஆட்சி செய்வதில் காட்டும் ஆர்வ அக்கறை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் காட்டப்படவில்லை

(இ.சுதா)

சிங்கள பெளத்த தேசியவாதத்தின் மூலமாக ஆட்சி செய்வதில் காட்டும் ஆர்வ அக்கறை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் காட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில்,

தேசிய இனப்பிரச்சினையினை அரசியல் முதலீடாகவும் தமிழ்த் தலைவர்களை வில்லர்களாக்கி, சிங்களத் தலைவர்கள் கதாநாயகர்களாக செயற்படும் அரசியல் சினிமாவே இலங்கையரசியலில் அரங்கேறுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை 1920 இல் பிரித்தானிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தினால் உருவாக்கப்பட்டது. அதாவது 1919 இல் தோன்றிய இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைவரான சேர்.பொன்.அருணாசலம் மூவினத்தவரின் விருப்புடன் தெரிவு செய்யப்பட்டார். மூவின ஐக்கிய இயக்கம் பிரித்தானிய ஆட்சிக்கு சவாலாக அமையும் என்பதற்காக, வில்லியம் மனிங் தேசாதிபதி சூழ்ச்சி மூலமாக தேசிய காங்கிரசிலுள்ள தமிழ், சிங்களத் தலைவர்கள் மத்தியில் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்திப் பூசலை ஏற்படுத்தினார். சட்ட நிரூபண சபைக்கான மேல் மாகாணப் பிரதிநிதித்துவம் ஒன்றினை அதிகரித்து, அதனைப் பெறுவதில் சிங்கள தமிழ்த் தலைவர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தினார்.

சிங்களத் தலைவர்கள் ஏற்கனவே தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தினை மீறினர். இதனால் அதிகரித்த பிரதிநிதித்துவத்தை விட்டுக் கொடுக்காததால், இலங்கைத் தேசிய காங்கிரசிலுள்ள தமிழ்த்தலைவர்கள் பிரிந்து சென்று சேர் பொன் அருணாசலம் தலைமையில் 1921 இல் தமிழ் மகாசபையினை உருவாக்கினர். இப்பிளவுடன் சிங்களவர், தமிழர் இனப்பிரச்சினைக்கான பலமான அத்திவாரம் இடப்பட்டது.

இதனை பிரித்தானிய ஆட்சியாளர் ஆரம்பித்து வைக்க சிங்களத் தலைவர்கள் இனவாத மதவாத கட்டுமானங்கள் மூலமாக தமது அரசியல் இலாபத்திற்காக மாறி மாறிக் கட்டமைத்து வளர்த்து விட்டனர். சிங்கள அடிப்படை வாத அரசியல் இலாப சிந்தனை எந்த முயற்சியையும் வெற்றி பெறவிடவில்லை.

1947 இல் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரசாவுரிமை வாக்குரிமைச் சட்டம், கல்லோயா சிங்கள குடியேற்றத்திட்டம் மூலமாக தமிழர் இனப்பிரச்சினையை வளர்த்ததுடன் மேலும் வலதுசாரிப் போக்குடைய ஐக்கிய தேசியக்கட்சி தனது அதிகார காலத்தில் இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் மேலும் வளர்த்து விட்டது.

இலங்கைக்கு சமஷ்டித் தீர்வு பொருத்தமானது என்று ஆரம்பத்தில் கூறிவந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்க தனிச்சிங்களச்சட்டம், பண்டா-செல்வா ஒப்பந்தத்தினை அமுல்படுத்தாமை மூலமாக இனப்பிரச்சினைக்கு மேலும் தீ மூட்டினார்.

மேலும், ஸ்ரீமாவோ அம்மையார் லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிசக்கட்சி என்கின்ற இடது சாரிக்கட்சிகளுடன் கூடி 1970 இல் ஆட்சியமைத்த பின்னர் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தினைக் கொண்ட முதலாம் குடியரசு யாப்பினை 1972 இல் வரைந்ததோடு தமிழர்களின் ஆறு அம்சக் கோரிக்கையை நிராகரித்து தமிழரின் இனப்பிரச்சினையை மேலும் எரியவைத்தார். இடதுசாரிகளாக வலம்வந்த லங்கா சமசமாசக்கட்சி, கம்யூனிசக் கட்சியி மீது தமிழ்மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையை கொல்வின் ஆர்டி சில்வா வரைந்த முதலாம் குடியரசு அரசியல் யாப்பு இல்லாமலாக்கியது.

எனவே, இடது சாரிகளின் ஆட்சிக்காலத்தில் சிங்களம், பௌத்தம் மேலோங்கி நிற்க பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல், தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தொழில்வாய்ப்பில் பாரபட்சம், சிங்களம் தெரியாத தமிழ் கிராம உத்தியோகத்தர் இடைநிறுத்தம் என்று பல சிங்கள அடிப்படைவாதக் கெடுபிடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சுதந்திரக் கட்சியின் ஊடாகப் பொதுசனமுன்னணி என்ற பரிமாணத்தில் 1994-2005 வரை ஆட்சி செய்த சந்திரிக்கா அம்மையார் சமாதானப்புறாவாகக் காட்சியளித்துப் பின்னர் பொறுமை இழந்து சண்டக்கோழியாக மாறினார்.

2005 முதல் 2015 களில் ஆட்சி செய்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச, 13 பிளஸ் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு தரப்போவதாகக் கூறினார். அதுவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனிடம் இந்த உத்தரவாதம் அளித்த பின்னர் அவரையே ஏமாற்றினார்.

தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் டி. எஸ் சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ, ஜயவர்தனா, பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிக்கா, ரணில், மகிந்த, ஜனாதிபதி கோதாபாய ராஜபக்ச என்று அனைத்துத் தலைவர்களும் அன்று தொட்டு இன்றுவரை அக்கறையற்றவர்களாக அல்லது தீர்க்க விரும்பாதவர்களாக இருந்து வந்துள்ளனர்.

நாடு எக்கேடு கெட்டாலும் இந்த ஹீரோ-வில்லன் அரசியல் 74 ஆண்டுகளாக நடைபெறுகின்றன. இந்த அரசியல் ஆளும் தரப்பினருக்கு கொள்ளை இலாபமீட்டும் அரசியல் வியாபாரமாக அமைந்துள்ளது.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையைத் தீர்க்கவல்ல தலைவர்களோ புத்திஜீவிகளோ மதத் தலைவர்களோ மனப்பாங்கர்களோ இந்த நாட்டில் எவருமே இல்லை. இதுதான் இலங்கையின் துயரமான கறைபடிந்த 74 ஆண்டு கால வரலாறாகும். பிரச்சினைகளை அரசியல் முதலீடாக்கும் அடிப்படைவாதப் பொறிமுறைகளே இந்த நாட்டில் அதிகார வர்க்கத்திடம் அதிகமாகவுள்ளது.

நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கவல்ல பல்லின ஆளுமையுள்ள ஆற்றலுள்ள சிங்களத் தலைவர்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே வழி சர்வதேசப்பொறிமுறையே.எனவே தமிழ்த்தலைவர்கள் தமிழ் மக்களுக்காக ஒன்றுபட்டு இப்பொறிமுறையை முறையாகக் கையாள வேண்டும். 74 ஆண்டுகள் தமிழர்க்குக் கிடைத்த பட்டறிவுப் படிப்பினை என்னவென்றால் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கவல்ல தலைவர்கள் இலங்கையில் இல்லை என்பதுதான் என்றார்.