செங்கலடி வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பில் மகஜர்

(குகதர்சன்)
கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செங்கலடி பிரதேச வைத்தியசாலை தற்போது வரை பின்னடைந்த நிலையிலே உள்ளது. இவ்வாறான வைத்தியசாலையினை வளர்த்து மக்களின் நலனை காப்பாற்றுவதற்குரிய தூரநேக்கு கொண்ட தலைமைகள் இல்லாமையினாலேயே எமது சமூகத்தில் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தெரிவித்தார்.
செங்கலடி வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரைச் சந்தித்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தின் மக்களுக்காக 1975ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செங்கலடி பிரதேச வைத்தியசாலை தற்போது வரை பின்னடைந்த நிலையிலே உள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையில் அளப்பரிய பங்கினை வகித்துள்ளது. இவ் வைத்தியசாலை பல கிராம மக்களை அடிப்படையாக கொண்டு தனது சேவையினை முன்னெடுத்து வருகின்றது.
A5 பிரதான வீதி அருகில் உள்ள இந்த வைத்தியசாலையினை பல அமைச்சர்கள், முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் கட்சி அமைப்பாளர்கள் எனப் பலரும் கடந்து செல்கிறார்கள். இவ்வாறான வைத்திய சாலையினை வளர்த்து மக்களின் நலனை காப்பாற்றுவதற்குரிய தூரநேக்கு கொண்ட தலைமைகள் இல்லாமையினாலேயே எமது சமூகத்தில் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
செங்கலடி வைத்தியசாலைக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் வைத்தியசாலை தற்போது ஆதார வைத்தியசாலையாக மாற்றம் பெற்று வளர்ந்து நிற்கிறது. இதேபோன்று தமிழர் பிரதேசங்களில் பல வைத்தியசாலைகள் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
தற்போது வைத்தியசாலைகளை முன்மாதிரியாக மாற்றி வெற்றி கண்டவரும், எமது பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சுகுணன் ஐயா அவர்களை சந்தித்து செங்கலடி வைத்தியசாலை தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
 எதிர்காலங்களில் தன்னால் முயன்றளவு முயற்சிகளைச் செய்து வைத்தியசாலைகளை முன்னேற்றுவது தொடர்பில் வெற்றி கொள்வோம் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.