விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பினால் சாதனைப் பெண்களுக்கு மட்டக்களப்பில் கௌரவம்!!

(கல்லடி நிருபர்)

விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பினால் சாதனைப் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (15) திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 5.00 மணியளவில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பின் தலைவி திருமதி.சசிகலா நரேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு வாடிவீட்டு விடுதியில் இடம்பெற்ற சாதனைப் பெண்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி.இந்திராவதி மோகன் கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன்போது சம கால கட்டத்தில் சாதனைப் பெண்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவத் துறையில் சாதனை படைத்து 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த செல்வி.த.தர்ஷிகா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குகொண்டு தங்கப்பதக்கம் வென்று விளையாட்டு துறையில் நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த முல்லைத்தீவு – மாங்குளத்தேச் சேர்ந்த யுவதியான கணேஷ் இந்துகாதேவி ஆகிய இருவரையும் பாராட்டி கௌவிக்கும் வண்ணம் இருவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு, கனடிய நாட்டு அமைச்சர்களால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள், பணப்பரிசில் மற்றும் நினைவுச்சின்னங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

மறைமுகமாக இருக்கும் திறமையான சாதனைப் பெண்களை கௌரவிப்பதை நோக்காகக் கொண்டு கடந்த 2013 ஆண்டு கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட விழித்தெழு பெண்ணே எனும் இவ் அமைப்பானது கனடாவில் சாதனைப் பெண்களை கௌரவிப்பது மட்டுமல்லாது இலங்கையிலும் சாதனை புரிந்துவரும் பெண்களை கௌரவித்துவருவதுடன், அண்மையில் கொழும்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் 100 சாதனைப் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை நடாத்தி சாதனைப் பெண்களை கௌரவித்திருந்தது மட்டுமல்லாமல்
மட்டக்களப்பிலும் சாதனைப் பெண்களை பாராட்டி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுடன், இவ்வாறான சாதனைப் பெண்கள் வெளிநாட்டு போட்டிகளில் பங்குபெற நிதி உதவிகள் தேவைப்படுமிடத்து தமது அமைப்பு அதனை வழங்குவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாக விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பின் தலைவி திருமதி.சசிகலா நரேந்திரன் இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் வீ.பிரதீபன், தொழில் அதிபர் அண்ணாச்சி, விழித்தெழு பெண்ணே அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் உட்பட சாதனைப் பெண்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.