மதங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தாமல் சமநிலையைப் பேணுங்கள்

(த.சுபேசன்)

மதங்களுக்கிடேயே விரிசல்களை ஏற்படுத்தாமல் சமநிலையைப் பேண முயற்சிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வினயமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் பகுதியில் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் தனது ஊடக அறிக்கையில்;

திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் பகுதியில் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சொரூபம் இந்து-கிறிஸ்தவ மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்த காரணமாக அமைந்து விட்டது.

சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க விரும்பும் ஒருசிலரின் செயற்பாடு காரணமாக ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஒற்றுமை கேள்விக்குட்படுத்தப்படுகிறது.
சமூகத்தின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உண்டு.
இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு தலத்தின் தனித்துவத்தை பாதிக்கும் வகையில் மற்றொரு மத ஸ்தானம் அமைப்பதற்கு உரிய அதிகாரிகள் அனுமதி அளிக்கக்கூடாது.அனுமதி இன்றி இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் உரிய சட்ட அணுகல் மூலம் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.அதைவிடுத்து மதங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பதனை அனுமதிக்க முடியாது.

அண்மைக்காலமாக இந்து ஆலய சிலைகள் உடைக்கப்படுவதுடன்-திருடப்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்றே.இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமையையும் சிதைத்து விடும்.சமூக சிதைவிற்கு வழிவகுக்காது மத ரீதியான நல்லிணக்கத்தை வளர்க்க முயற்சிக்க வேண்டும்.என மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.