பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பிலும் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம், மனோ கணேசன், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்த இந்த போராட்டம் கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.