(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளராக இந்திராவதி மோகன் கடந்த 11.02.2022 திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது அரச சேவையை 1989 ஆண்டு அமைய நிதி உதவியாளராக வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில் கடமைகளை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில் அமைய நிதி உதவியாளராக கடமையாற்றியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து, ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.
2016 ஆண்டு பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண திரைசேரியில்
பிரதம கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 11.02.2022 திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் – 05 ஆம் குறிச்சி பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது ஆரம்ப கல்வியை ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயம், ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயம், வந்தாறுமூலை மகா வித்தியாலயம் என்பவற்றில் பயின்று தனது உயர் கல்வியினை மட்டக்களப்பு இந்து கல்லூரியில் பயின்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் பட்டப்படிப்பினை நிறைவு செய்ததுடன், காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைப்பட்டத்தினையும், அபிவிருத்திப் பொருளாதார முதுகலைப்பட்டத்தினை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளதுடன், அரச கணக்கியல் உயர் டிப்ளோமா பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.