நாடு தடுமாற காரணம் நாட்டின் பொருளாதர கொள்கைகளே : சோம்பறிகள் போன்று வாழும் பொருளாதார கொள்கைகளே நம்மீது திணிக்கப்பட்டுள்ளது 

(நூருல் ஹுதா உமர்)

தடுமலை விட சிறிய வைரஸினால் உருவான கொரோனா இந்த நாட்டினது மட்டுமின்றி உலகினது போக்கிலும் மாற்றத்தை உண்டாக்கி மனித மனங்களிலும் பாரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. அதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் இலங்கையர்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்கான காரணம் வெறுமனே கொரோனாவின் தாக்கம் மட்டுமல்ல. கடந்த காலங்களில் சுதந்திரத்தின் முன்னரும் குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரும் மேற்கொண்ட பொருளாதார கொள்கையின் முறையற்ற தன்மையினால் நாம் இன்று அரசி, பால்மா, சிறுபிள்ளைகளின் உணவுகள், எண்ணெய், பழ வகைகள் என தேவையான பொருட்களை வாங்க டொலர் தேடி அலைகிறோம் என தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நமது முன்னோர்கள் டொலர் தேடி எங்கும் அலையவில்லை. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு மக்களை விழிப்பூட்டும் இந்த விடயம் சவாலாக முன்வைக்கப்டுகிறது. உலக சந்தையில் பெறுமானம் கூடிய மாணிக்கக் கல் எமது நாட்டில் இருக்கிறது. பருவ மழைகள் சிறப்பாக பொழிகிறது, ஆதம் மலையையும் கொண்ட இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட அழகான நாடு. இவற்றையெல்லாம் முறையாக பயன்படுத்த தெரியாதவர்களாக நாம் இருக்கிறோம். பழைய அரசர்கள் கட்டிய குளங்களின் பின்னர் புதிய குளங்கள் அமைக்கப்படவில்லை. களப்பு நிறைந்து நீர் கடலுடன் வீணாக சென்று சேர்கிறது. வெளிநாடுகளில் பணத்தை செலவழித்து நீரை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நீரைப்பற்றி சிந்திப்பதே இல்லை. எமக்கிருக்கின்ற வளமான நிலம் போன்று வேறெங்கும் இல்லை. நாம் சோம்பறிகள் போன்று வாழும் பொருளாதார கொள்கைகளே நம்மீது திணிக்கப்பட்டுள்ளது.

நமது உற்பத்திகளை பொருளாதாரமாக மாற்ற கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட அநீதிகளின் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட பிரதியீட்டு பொருட்களையே நாம் அன்றாடம் பாவிக்கிறோம். இலங்கையின் பழவகைகளுக்கு உலக சந்தையில் உயர்ந்த பெறுமானம் இருக்கிறது. பாலுற்பத்தியில் தன்னிறைவடைந்து தயிரை உருவாக்கியவர்கள் நாங்கள். அன்று வயல் செய்வது வயிற்றுக்காக என்றவர்கள் இன்று வியாபாரமாகி பரிதவிக்கும் நிலையில் உள்ளார்கள். மீண்டும் பழைய நிலைகளை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாம் ஹராமாக்கிய பதுக்கல் வெளிப்படையாக நடைபெறுகிறது. விலையேறும்வரை தானியங்கள் பதுக்கப்படுகின்றன. அதற்காக எமது வாழ்வினை நாம் ஏமாற்றத்தில் கொண்டுசெல்ல முடியாதது. இன்று எண்ணெய் இல்லையென்றால் மின்சாரம் இல்லை, எரிவாயு இல்லை, டொலர் இல்லை எனும் நிலை தோன்றியுள்ளது. இதனையே நான் பல தசாப்தங்களாக பேசி வந்துள்ளேன்.

பயங்கரவாதம், யுத்தம், இயற்கை அனர்த்தங்களின் பல்வேறு புரட்ச்சி கவிதைகளை நாம் எழுதியிருக்கிறோம். கவிதைகளினூடாக அந்த காலத்தின் நிலைகளை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அதுபோன்றுதான் கொரோனா காலத்திலும் நிறைய கவிதைகளை நாம் எழுதியிருப்போம். அந்த காலங்களில் உளவியல் ரீதியாக பாரிய துன்பங்களை சந்தித்திருந்ததுடன் நிறைய பிரார்த்தனைகளை செய்தோம். ஜனாஸாக்கள் எரிந்ததை கண்டு வேதனையுடன் நாம் வாழ்ந்த காலங்களில் அதனை ஒட்டியதாக கவிதைகள் வடிக்கப்பட்டிருந்தால் அதில் உயிரோட்டம் இருந்திருக்கும்.

அந்த காலங்களில் எழுத்தாளர்கள் உருகி உருகி எழுதினார்கள், உலமாக்கள் நள்ளிரவிலும் தொழுது அழுது பிராத்தித்தார்கள், அரசியல்வாதிகள் தம்மால் முடிந்த உயர்ந்த பங்களிப்பை மேற்கொண்டார்கள். கவிஞர்களும், இலக்கியவாதிகளும் தமது இலக்கியங்களில் பிராத்தித்தார்கள். இறைவனின் நாட்டத்தினால் நாம் அதிலிருந்து மீண்டுவந்தோம். இருந்தாலும் அது இன்னும் முற்றுப்பெறவில்லை. இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் எலிக்காய்ச்சல் போன்றோ அல்லது கரப்பான் காய்ச்சல் என்ற பெயரிலையோ ஒன்று வந்தால் அன்று அதிகாரத்திலிருக்கும் அமைச்சர் தனது மூப்பில் ஒரு வர்த்தமானியை வெளியிட்டால் அதனில் உண்டாகும் நிலையை எண்ணியவர்களாக அதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்ற மனோநிலையில் வாழ்கின்ற காலத்தில் மூத்த இலக்கியவாதிக்கு பாராட்டு நடக்கிறது பாலமுனை பாரூக்கும் இந்த நாடு சந்தித்த முக்கிய அத்தனை அசாதாரண நிலைகளிலும் வாழ்ந்திருக்கிறார். அந்த நிலைகளின் கண்ணாடியாக அவரது எழுத்துக்களை வெளிக்காட்டியும் இருக்கிறார்- என்றார்.