காட்டு அணில் , குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை தமன பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் காட்டு அணில் மற்றும் குரங்குகளின் தொல்லைகளினால் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

மலயாய மற்றும் கல்ஓயா தேசிய வனப்பகுதியிலுள்ள நெல்லிக்காட்டிலிருந்து கூட்டம் கூட்டமாக கிராமத்திற்குள் நுழையும் காட்டு அணில்களும் , குரங்குகளும் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழமரங்களுக்கு பலத்த சேத்த்தை விளைவிப்பதுடன் , வீடுகளுக்கு மேலாக பாய்ந்து செல்வதால் வீட்டின் ஓடுகளும் உடைந்து சேத்த்திற்குள்ளாகின்றன.

கிராமப் புறங்களுக்குள் கூட்டமாக வரும் குரங்குகள் திறந்துள்ள வீடுகளுக்குள் நுழைந்து சமயலறையிலுள்ள உணவுப் பொருட்களை உண்டு நாசப்படுத்துகின்றன.
தமன பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஹிங்குரான , நெலகம்புர , ஹுனுகொட்டுவ , பாசலபெதச ,மற்றும் கரலேவ போன்ற கிராமங்களில் பயிர்செய்யப்பட்டுள்ள கொய்யா , வாழை , மா போன்ற பழ மரங்களின் பிஞ்சுகளை கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் தமது விவசாய முயற்சிகளை தொடர முடியாதுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு அணில்களையும் , குரங்குகளையும் அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து சனநடமாட்டம் இல்லாத வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.