அம்பாறை மாவட்த்தில் பசளையின்றி மஞ்சளாகிவரும் வயல்கள்; விவசாயிகள் கவலை!

( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் கணிசமானளவு பங்கைவகிக்கும் அம்பாறை மாவட்த்தில் உள்ள நெவ்வயல்களின் நிலைமை பரிதாபகரமாக இருப்பதாக விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர்.

உரியவேளையில் உரிய பசளையின்றி வயல்கள் மஞ்சளாகிவருகின்றன. அதுமட்டுமல்ல வீரியமில்லாமல் சிறுபயிராகவே காணப்படுகின்றது. இந்நிலையில் வழமையான விளைச்சலை ஒருபோதும் காணமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சேதனப்பசளைகளைப் பாவித்தபோதும் பயிர்கள் வழமைக்குமாறாக வீரியமின்றி வளர்ச்சிகுன்றி மஞ்சள் நிறமாகிவருகிறது.தரமில்லாத சேதனப்பசளைகளும் விநியோகிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

யூறியாப் பசளை கள்ளச்சந்தையில் 50கிலோ மூடை ஒன்று 30 ஆயிரம் ருபா தொடக்கம் 35ஆயிரம் ருபாவரை விற்கப்படுகின்றது. சில விவசாயிகள் அதனைவாங்கி ஒரு ஏக்கருக்கு பாவிக்கவேண்டியஅளவை 3ஏக்கருக்கு பாவிக்கின்றனர். ஏதோ விதைத்துவிட்டோம் திருப்திக்காக இவ்வாறு செய்கின்றோம்.இனி விளைச்சல் இறைவனின் கையில்.. என ஆதங்கத்துடன் கவலையுடன் கூறுகின்றனர்.

முன்னோருபோதுமில்லாதவகையில் விளைச்சல் குன்றி பஞ்சம் ஏற்படப்போவதை இன்றைய மஞ்சள்நிறப்பயிர்கள் கட்டியம் கூறி நிற்பதாக அவர்கள் ஆருடம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நெல்லின்விலையும் அரிசியின்விலையும் என்றுமில்லாதவாறு விசம்போல் ஏறிச்செல்கின்றது.

3000ருபாவிற்கு விற்ற 25கிலோ அரிசி மூடை தற்போது 4400ருபாவிற்கு விற்கப்படுகிறது.ஒரு மூடை நெல் 5000_6000 ரூபா வரை விற்கப்படுகிறது.மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.