மதங்கள், இனங்கள் வேறாக இருந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப எல்லோரும் ஒரே மக்களாக செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கல்முனையில் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இந்து மக்கள் மாத்திரமல்லாது மாவட்டத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகின்றது. மதங்கள், இனங்கள் வேறாக இருந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒரே மக்களாக செயற்பட வேண்டும் என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் கல்முனையில் தெரிவித்தர்.

அம்பாறை மாவட்டத்தின் பிரதான தைப்பொங்கல் நிகழ்வு கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பழைய பஸ் நிலையத்திற்கு முன்னால் (14) நடைபெற்றது.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றுகையில், பெண்கள் சாரி அணிவதும், பொட்டு வைப்பதும் இந்தியாவிலிருந்து நாம் பின்பற்றிய கலாச்சாரமாகும். நான் ஒரு பௌத்தராக இருந்த போதிலும் தமிழர்களின் தைப்பொங்கலை கொண்டாடுகிறேன். ஏனைய சிங்கள மக்களும் இதனை கொண்டாடுகின்றனர்.

பொங்கல் பானையில் தானியம் உட்பட ஏனைய பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்க்கும் போதே சுவை வருகிறது. அது போன்று எல்லா மதங்களும், இனங்களும் தங்களது கலாச்சார, பண்பாட்டு விடயங்களை சேர்க்கும் போதே சுவையான சூழல் உருவாகிறது.

அம்பாறை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்த மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும் நான் இன மத மொழி வேறுபாடுகள் இல்லாத ஒரு நல்ல சூழலை இந்த மாவட்டத்தில் கட்டியெழுப்ப எதிபார்த்துள்ளேன். எனக்கு உங்கள் ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பு முக்கியமான ஒன்றாகும்.

என்னை பிரதம அதிதியாக அழைத்து இப்படியான ஒரு கௌரவத்தை வழங்கிய இன்றைய நாளை என்னால் மறக்க முடியாது. இதனை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் நடனமும் இடம்பெற்றன. நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ் இளைஞர் சேனை அமைப்பினால் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பிரிகேடியர் அபயகோன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.புத்திக, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றபீக், 18 வது பிரிவு கட்டளையிடும் இராணுவ அதிகாரி, மேஜர் சிறிசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்

அம்பாறை மாவட்டத்தின் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் கல்முனையில் தனது முதல் நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு தமிழ் இளைஞர்களால் அரசாங்க அதிபருக்கு முடி சூடப்பட்டு பொன்னாடை போர்த்தி மகத்தான வரவேற்பும் இங்கு வழங்கப்பட்டது.