ஒரு தாயின் பதில் ‘தைபிறக்கட்டும்’

– படுவான் பாலகன் –

கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை.
வெளிச்சமும் குறைந்து குறைந்து இருளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. விளையாடிக்கொண்டிருக்கின்ற பிள்ளைக்கும் அச்சம் ஏற்படுகின்றது. ஓடிச்சென்று தாயின் கழுத்தினை இறுகப்பிடித்து

அம்மா! அம்மா! இருட்டாகித்து.. உள்ள போவம் வாங்க அம்மா..” என்கிறாள்.
அப்போதுதான் சூரியன் மறைந்து சந்திரன் வெளிச்சத்தினைக்கொடுத்ததைக் காண்கிறாள். பிள்ளையின் கைகளில் இருந்த மண்ணினை தட்டிவிடுகிறாள். அப்போது தாயின் முகத்தினைப் பார்த்த பிள்ளை.

‘அம்மா பக்கத்துவீட்டில குருத்து, கரும்பு வெட்டி வைச்சிருக்காங்க…’ நம்மட ஒழுங்கையால உடுப்பு வித்து வாற மாமாட்ட உடுப்பும் எடுத்தவங்க அம்மா’… ‘நம்ம ஒன்றும் செய்ய இல்லையே அம்மா…’ நம்ம உடுப்பெல்லாம் எடுக்கிற இல்லையா அம்மா’

என கேட்டதும், பார்வதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எவ்வாறு பிள்ளைக்கு விளங்க வைப்பதும் என்றும் புரியவில்லை.
ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பார்வதி 5வது பிள்ளை. இவளுக்கு ஒரே ஒரு ஆண் சகோதரர். அச்சகோதரனும், தாயும், தந்தையும் யுத்தத்தில் இறந்து விட்டனர். பெண்சகோதரர்கள் திருமணமாகி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில் இருக்கின்றனர். ஒருவருக்கொருவர் தொடர்பும் குறைவு. வசதிபடைத்தவர்களும் அல்லர். குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் மட்டும் கலந்து கொண்டு உறவுகளுடன் பேசுவது மட்டுமே வழமை. பார்வதியும் பள்ளி படிக்கும் போது கெட்டிக்காரியாக இருந்தாள். தாய், தந்தை, சகோதரனை இழந்தமையினால் பார்வதியும் அவளுடன் திருமணம் செய்யாமல் இருந்த இரு சகோதரர்களும் மாமாவின் அரவணைப்பிலேயே இருந்தனர். மாமாவும் எப்படியாவது இவர்களை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். இதனால் பார்வதியை தொடர்ந்து படிப்பிக்காமல் திருமணம் செய்து வைத்துவிட்டார். அத்துடன் அவரின் கடமைகள் முடிவடைந்துவிட்டதாகவும் நினைத்துவிட்டார்.

பார்வதி கல்வியில் முன்னிலையில் இருப்பாள், அரசதொழில் பெற்று உயர்நிலையில் நிற்பாள் என்று அடிக்கடி அவளை கற்பிக்கும் மாணவர்களும் சொல்வதுண்டு. இதனால் தனது எதிர்காலத்தினை நினைத்து நினைத்து பார்வதியும் பூரிப்படைவதுண்டு. ஆனால் அவளின் மனக்கோட்டை சரிந்து, குடும்பம் என்ற வாழ்க்கையில் புகுந்துகொண்டாள். தனது தாய், தந்தை உயிருடன் இருந்த போது அவள்கொண்ட சந்தோசத்தினையும், அவர்கள் இவளை கற்பிக்க வேண்டும் என்று எத்தனை ஆசைகள் கொண்டனர் என்றும் நினைத்து தனக்குள்ளே புலம்புவதுண்டு.
முன்பின் பார்த்திராத ஒருவனைதான் பார்வதியின் மாமனும் இவளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவளுக்கென 10பேர்ச் அளவிலான காணி ஒன்று இருந்தது. அந்தப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருக்கின்ற காணியின் காற்பகுதிதான் இவள் இருக்கின்ற காணி. அதில் ஓலையாலான குடிசையொன்றினையே அவளது மாமா கட்டிக்கொடுத்தார். திருமணம் செய்து கொடுத்துவிட்டு போனவர், திருமணம் ஆகிய 9வருடங்கள் கடந்தபோதிலும் ஒரு நாள்கூட அவளை வந்து பார்த்ததில்லை. அவளும் தேடிப்போனதுமில்லை.

திருமண நடந்த நாளைத்தவிர அனைத்து நாட்களும் குடித்துவிட்டுதான் வீட்டுக்கு இவளின் கணவர் வருவதுண்டு. அவ்வாறு வீட்டிற்கு வந்தும் பேசாமல் தூங்குவதும் இல்லை. ஒவ்வொரு நாளும் இடி, முழக்கம் போலதான் சத்தம் கேட்கும். அயலவர்கள் வேடிக்கை பார்ப்பவர். இது பழகிபோனதொன்றாக மாறிவிட்டது. அவ்வாறு பக்கத்துவீட்டில் உள்ளவர்கள் கேட்க சென்றாலும் அவர்களையும் வீண்வம்புக்கு அழைத்து முரண்பட்டுக்கொள்வதோடு, தேவையற்ற வீண் வார்த்தைகளும் பேசுவதுண்டு. இதனால் அவளைப்பார்த்து பரிதாபப்படுன்றவர்களாக மட்டுமே அயலவர்கள் உள்ளனர்.

கல்யாணம் செய்துகொடுத்த மாமனுக்கு இச்செய்தி தெரிந்தாலும் ஒரு நாள்பொழுதுகூட எட்டிப்பார்த்ததில்லை. பார்வதிக்கு நாளாந்தம் அடியினை வாங்கி வாங்கி உடல் மருத்துப்போனது போல, நாள்தோறும் ஏச்சினையும் கேட்டு மனமும் சலித்துபோய்விட்டது. திருமணம் செய்து ஓரிரு நாட்களிலேயே வீட்டு வேலையில் சேர்ந்துவிட்டாள். அதன்மூலம் கிடைக்கும் பணத்தினைக்கொண்டே குடும்பத்தின் செலவினை ஈடுசெய்து வந்தாள். அவ்வாறு கொண்டுவரும் பணத்தினையும் குடிப்பதற்காக அவளின் கணவன் பறித்தெடுப்பான். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பொறுமையாகவே இருப்பாள். எதிர்த்துக்கூட ஒரு வார்த்தை பேசமாட்டாள். பேசினாள் இன்னமும் விபரிதம் கூடும் என அவளுக்கு நன்கு தெரியும். போதை இல்லாத நேரத்தில் புத்திமதிகளை கூறினாலும் அதனையும் ஏற்கவில்லை. காலை எழுந்தவுடன் தண்ணீருக்கு பதிலாக சாராயமே குடிப்பான். இவளும் அறிவுரை கூறுவதனையும் நிறுத்திக்கொண்டாள். பிள்ளையொன்றினையும் பெற்றெடுத்தாள். அதற்கும் பிறகும் குடிப்பழக்கத்தினை நிறுத்தியாகவில்லை. பிள்ளையை வளர்ப்பதற்காக மிகவும் துன்பப்பட்டாள். வேலைக்கு செல்லாததினால் செலவுக்கு பணமில்லாது. அயலவர்களுடன் கடன்பெற்றுத்தான் பிள்ளையை வளர்த்தெடுத்தாள். இவளை நம்பி ஓரிரு நாட்களுக்கு பணத்தினை கடனாக கொடுத்தாலும், தொடர்ச்சியாக கொடுப்பதற்கு அயலவர்களும் கொடுப்பதற்கு தயங்கினர். இவளுக்கும் அவர்களின் சங்கடங்கள் விளக்கின. கடன்பட்டாலும் உரிய நேரத்திற்கு பணத்தினைக்கொடுத்துவிடுவாள். நேர்மையாகவும் நடந்துகொள்வதுண்டு. அயலில் உள்ளவர்களுக்கு சரீரஉதவிகளையும் செய்துகொடுப்பாள் இதனால், தயங்கி நின்றாலும், அவளின் முகத்தினை எவ்வாறு முறிப்பதென்று தெரியாமல், கேட்ட கடனை கொடுத்தனர். பிள்ளைக்கு ஆறுமாதம் கடந்ததும், பக்கத்து வீட்டில் பிள்ளையை விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவரத்தொடங்கி, படிப்படியாக கடனையும் அடைக்கத் தொடங்கினாள். வருடங்களும் கடந்தோடி பிள்ளைக்கும் ஆறுவயதாகவிட்டது. கணவனின் நாளாந்த நடவடிக்கை குறையவில்லை.

நாளைக்கு தைப்பொங்கல் எல்லா வீட்டிலும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவளும் தன்மகளுக்கும் எல்லா பண்டிகைகளுக்கும் புத்தாடை எடுத்துக்கொடுப்பதுடன், மகள் கேட்பதையும் வாங்கிக் கொடுப்பதுண்டு. தைப்பொங்கல் நாளை என்பதினால் தை மாதத்திற்கான சம்பளத்தினை முன்கூட்டியே வழங்க வேண்டுமென, தைமாதம் பிறந்ததில் இருந்தே வேலைசெய்யும் வீட்டுக்காரிரிடம் கேட்கத்தொடங்கி, இன்றுகாலையில் சம்பளத்தினைப்பெற்று மகளுக்கு புத்தாடையும், பொங்கலுக்கான பொருட்களும், சமையலுக்கும் மரக்கறிகளும் வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்துவிட்டு, வேலைசெய்யும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தமையினால் மீண்டும் அவ்வீட்டிற்கு சென்றுள்ளாள்.

நாளை தைப்பொங்கல் என்பதினால் தனக்கு குடிப்பதற்கும், தனது நண்பர்களுக்கு கொடுப்பதற்கும் சாராயம் வேண்டும். இதற்கு பணமில்லையே என்று எண்ணிக்கொண்டு வந்த பார்வதியின் கணவனுக்கு, பார்வதி தனது மகளுக்கு ஆசையோடு வாங்கி வைத்திருந்த உடுப்புகளையும், அரிசிமூடையினையும் கண்டவுடன் மனதில் சந்தோசம் பொங்கியது. ஆடையினை எடுத்து விலையினை தேடுகிறான். அதிலே இரண்டாயிரத்து ஐந்நூறு என எழுதப்பட்டிருந்தது.

‘விலைகூடிய உடுப்புத்தான்… அரிசியும் 25கிலோகிராம் உள்ளது. இப்போ நாட்டில் பொருட்களுக்கு விலை அதிகம்தானே நாலாயிரம் போகும் போல..’ என தனது மனதுக்குள்ளே சொல்லி ஆனந்தம் அடைகின்றான்.
வானத்தினைப் பார்த்து நேரத்தினைக் கணக்கிட்டு
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாள்..’ வேகமாக வீட்டை விட்டுப்போக வேண்டும்..
என்று வெளியேறுகின்றான் வேலைக்கு போன பார்வதியும் வீட்டிற்கு வருகிறாள். வாசல் கதவு இவள் அடைத்துவிட்டு சென்றது போல் இல்லை. கால்தடத்தினை பார்க்கின்றாள். தனது கணவனின் கால்தடங்கள் போல் தெரிகிறது. பக்கத்து வீட்டில் இருக்கின்ற மாரியை கூப்பிடுகின்றாள்.

‘மாரி அக்கா இவர் வந்துபோனவரா? என்று கேட்க, ‘ ஓம் பிள்ளை’ என்ற பதிலும் கிடைக்கிறது.
என்னவும் கொண்டு போகிறாரா? என்று கேட்க நானும் ‘வேலையாக நிண்டதாலா பார்க்கவில்லை’ என மாரியும் கூற,
பார்வதியின் மனதில் இடிவிழுந்தது போல் இருக்க, பதற்றத்துடன் வீட்டுக்குள் ஓடுகிறாள். முன்வாசலில் விளையாடிக்கொண்டிருக்கும் தனது மகளையும் பார்க்காமலே அவசரமாக செல்கின்றாள். அவள் நினைத்தது அங்கு நடந்திருந்தது.

‘அவர்தான் விற்க கொண்டு போய்விட்டார்’ என்று தனக்குள்ளே கூறிவிட்டு, ‘இது நமக்கு புதிது இல்லைதானே’
என தனக்குள் சமதானம் செய்து கொண்டு கால்தடுமாற, சோர்விழந்து, பலமின்றி வாசலிலே உட்காருகின்றாள். அப்போதுதான் பிள்ளையும் கழுத்தினை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உடுப்பு எடுக்கிற இல்லையா.. என்று கேட்கிறது.

பிள்ளையை கூட்டிக்கொண்டு கைகள் இரண்டையையும், முகத்தினையும் கழுவிக்கொண்டு, வீட்டிற்குள் விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு, வெளியில் வந்து பார்க்கின்றாள் எல்லா வீட்டு வாசலிலும் வெளிச்சம் தெரிகிறது. இவள் வீட்டு வாசலில் இருளே சூழ்ந்திருக்கின்றது. பிள்ளை மீண்டும் ‘ அம்மா உடுப்பு எடுக்கிற இல்லையா…? என்கிறாள். ‘தைபிறக்கட்டும்’ என மெதுவாக பதிலளிக்கிறாள் பார்வதி.