கிராமிய பொருளாதாரத்தின் எழுற்சியில்தான் நாட்டின் வளர்ச்சி தங்கியிருக்கின்றது

(ரக்ஸனா)

கிராமங்கள் தன்னிறைவு அடைந்தால்தான் நாடு தன்னிறைவு அடைய முடியும். தற்போது விவசாயம், கால்நடை, சிறு பொருளாதார பயிற்செய்கை, கிராமங்களிலுள்ள உற்பத்தி பொருளாதாரத்தை நகரங்களுக்குக் கொண்டு வருவதற்கு முறையான போக்குவரத்து வசதி மிக மிக முக்கியமானதாகும். அதன் காரணமாகத்தான் அரசாங்கம் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. கிராமிய பொருளாதாரத்தின் எழுற்சியில்தான் நாட்டின் வளர்ச்சி தங்கியிருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவாங்கரைப் பகுதியையும், எழுவாங்கரைப் பகுதியையும் இணைக்கும், மிக நீண்ட காலமாக பழுதடைந்ட நிலையில் மக்கள் போக்குவரத்துச் செய்து கொண்டிரக்கும், பட்டிருப்பு பாலத்தின் தற்போதைய நிலமை குறித்து நேரில் சென்று ஆராயும் வகையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்டோர் பாட்டிருப்பு காலத்திற்கு வியாழக்கிழமை(13) விஜயம் செய்து நிலமைகளை நேரில் பார்வையிட்டார்.

இதன்போது பாலத்தின் நிலமையை அவதானித்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

பழுதடைந்த நிலையில் தற்போது ஒரு பகுதியில் மாத்திரம் போக்குவரத்துச் செய்யப்படும் பட்டிருப்பு பாலத்திற்கு மாற்றீடாக அவ்விடத்தில் புதிய பாலம் அமைத்து அதனை விரைவில் மக்களின் பாவனைக்கு வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சியென்ற பெயரில் சொல்லாட்சி நடாத்திய காலத்தில் கிழக்கில் ஒரு பாலம் கூட நிருமாணிக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே அதிக பாலங்கள் அமைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக முக்கிமான பாலமாகவும் மிகவும் பழமைவாய்ந்த பாலங்களில் ஒன்றாகவும் காணப்படுவது இந்த பட்டிருப்பு பாலமாகும். இதுமிகவும் மோசமான நிலையில் உள்ளது.

குறித்த பாலத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உடைவு காரணமாக ஒரு பகுதியில் மாத்திரம் போக்குவரத்து மத்திரமே இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இப் பாலத்தை புனரமைக்கும் பணிகள் தொடர்பான செயற்பாடுகள்தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு திட்ட வரைபுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 165 மீற்றர் நீளமும் 10.5 அகலமும் கொண்ட குறித்த பாலத்தை புனரமைப்பதற்காக 1000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சிக்காலத்தில் பல பாலங்கள் அமைப்பதற்குப் பதிலாக கற்கள் மாத்திரம் நடப்பட்ட நிலையில் எந்தவித பாலங்களின் நிருமாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன என இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விஜயத்த்தின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் நிறைவேற்று பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.