ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா அமைப்பாளராக கிருஸ்ணசாமி சந்திரசேகரன்

(தலவாக்கலை பி.கேதீஸ்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா அமைப்பாளராகவும் ,ஊடக செயலாளராகவும் மற்றும் முகாமையாளராகவும் முன்னாள் நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட நியமனத்தை முன்னாள் ஜனாதிபதியும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

நுவரெலியாவைச் சேர்ந்த சந்திரசேகரன் அவர்கள் குருத்தலாவ சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு முதன் முறையாக நுவரெலியா மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு நுவரெலியா மாநகர சபை பிரதி நகர முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு நுவரெலியா மாநகரசபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அன்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அந்த மூன்று உறுப்பினர்களில் சந்திரசேகரும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வந்த தேர்தலில் இவர் போட்டியிட வில்லை. சிறிது காலம் அரசியிலிருந்து ஓய்வு பெற்று தனது அரசியல் ஆதரவாளர்களின் வற்புறுத்ததால் மீண்டும் அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். சிறந்த சமூக சேவையாளரான இவர் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா சீதையம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் நுவரெலியா இந்து கலாச்சார பேரவையின் ஆயுட்கால உறுப்பினருமாவார். இவர் நுவரெலியா கால்பந்தாட்ட லீக்கிலும் உப தலைவராக இருந்தபோது கால்பந்தாட்ட வீரர்களையும் ஊக்குவித்துள்ளார். இவர் நுவரெலியா மாநகர சபை பிரதி நகர முதல்வராக இருந்த காலத்தில் ஜப்பான் நாட்டு கொல்ப் கழகத்தின் ஆதரவுடன் இலங்கையில் முதன் முறையாக கிரவுன் கொல்ப் விளையாட்டை ஆரப்பித்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.