அதிபர் நியமனத்திற்கான விண்ணப்பம் மொழி அடிப்படையில் கோரல்; நீதிமன்ற நடவடிக்கையின் எதிரொலி என்கிறது கிழக்கு கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை அதிபர் சேவை நியமனத்திற்கு விண்ணப்பம் கோரும்போது கடந்த காலங்களில் மொழி உள்ளிட்ட சில விதிமுறைகள் மீறப்பட்டதை ஆட்சேபித்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாகவே இம்முறை மொழி வாரியாக விண்ணப்பம் கோரப்பட்டிருக்கிறது என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக இம்முறை தமிழ் மொழி பேசுவோருக்கென பிரத்தியேகமாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் 1525 பேர் கட்டமைக்கப்பட்ட நேர்முக பரீட்சையின் மூலம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

வட மாகாணத்தில் இருந்து 230 பேரும், கிழக்கு மாகாணத்தில் இருந்து 623 பேரும் ஏனைய மாகாணங்களில் இருந்து சுமார் 700 பேரும் தமிழ் மொழி மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அதிபர் சேவை பிரமாணக் குறிப்பை பின்பற்றி இம்முறை தமிழ் மொழி மூலம், சிங்கள மொழி மூலம் என தனித்தனியாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற நியமனத்தில் இவ்விதிமுறை மீறப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருவதன் எதிரொலியாகவே இம்முறை மொழி வாரியாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.