கொவிட் சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு

12.01.2022 சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு

12. 01. 2022 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு மீண்டும் கூடி மகுடநுண்ணிப் பெருந் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தமது புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் தெரிவித்தனர்.

கடந்த சிலைத்திங்கள் (மார்கழி) ஒன்றுகூடிய பின்னர் புத்தாண்டில் இது முதலாவது ஊடகசந்திப்பாக அமைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் இன்றைய நாட்கணக்கில் 67.9 வீதமான மக்கள் முழுமையாக தடுப்பூசி இட்டுக்கொண்டுள்ளார்கள். ஆனாலும் நாள் ஒன்றிற்கு தற்போது 32881 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது, கடந்த 7 நாட்களில் சராசரியாக 25371 தொற்றுக்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

புதிய முடக்கம் இல்லை

வழமையாக சுவிற்சர்லாந்து நடுவனரசு மகுடநுண்ணித்தொற்றுத் (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கடந்த காலத்தில் அறிவிப்புக்கள் செய்தபோதெல்லாம் அடுத்து என்ன முடக்கம் வரும் என்ற அச்சமே மிஞ்சியிருந்திருக்கின்றது. ஆனால் முதன்முறையாக தொற்றின் தீவிரம் கூடிவரும் நிலையிலும் சுவிற்சர்லாந்து புதிய முடக்கக் கட்டுப்பாடுகளை அறிவிக்கவில்லை.

தனிமைப்படுத்தும் காலம் குறைகின்றது

நோய்த்தொற்று இருக்கலாம் எனும் ஐயத்தில் தனிமைப்படுத்தப்படும் ஆட்களின் தனிமைப் படுத்தப்படும் காலம் 5 நாட்களாக குறைக்கப்படுகின்றது.

இவ்விதி 13. 01. 2022 இன்றுமுதல்  நடைமுறைக்கு வருகின்றது.

தொழில்வழங்குவோர் சம்மேளனம் அரசின் முடிவை வரவேற்றுள்ளது

நோய்த்தொற்றிற்கு ஆளான ஒருவருடன் நெருக்கத்தில் இருந்திருப்பின் அவர் தன்னை 5 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 5 நாட்கள் கடந்து நோய்த்தொற்று அறிகுறிகாணப்படாவிடின் அவர் வழமைபோல் பணிக்கு செல்லலாம் என்கின்றது புதிய விதி. ஆகவே இது சுவிஸ் அரசின் தளர்வாக நோக்கப்படுகின்றது.

இதன் நோக்கம் சுவிற்சர்லாந்தில் மக்களை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் காப்பாற்றுவது ஆகும். அதுமட்டுமல்ல நோய்த்தொற்று ஆளான நபருடன் ஒரே வீட்டில் வாழ்பவருக்கும், அடிக்கடி தொடர்ச்சியாக நோய்தொற்று ஆளான ஆளுடன் நெருங்கி பழகிவருபவர்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்படும் விதி செல்லுபடியாகும்.

பெரும்பாலான மாநிலங்கள் சுவிற்சர்லாந்து அரசு தனிப்மைப்படுத்தப்படும் காலத்தை சுருக்குவதை வரவேற்றுள்ளன. தொழில்வழங்குவோர் சம்மேளனம் மேலும் தளர்வுகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது சுவிசில் நூற்று அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட ஆட்கள் வீடுகளில் மகுடநுண்ணித் தொற்றிற்கு உள்ளாகி, அல்லது நோய்த்தொற்று உள்ளவர்களுடன் நெருங்கி இருந்தார்கள் என்பதால் வீட்டில் முடங்கி இருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்கள் குறுகிய 5 நாட்களுக்கு மட்டும் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு, தமது பணிகளை ஆற்றுவதே சிறந்த பொருளதாரத்திற்கு வழி எனவும் தொழில்வழங்குவோர் சம்மேளனம் அறிவித்து சுவிஸ் அரசின் முடிவை வரவேற்றுள்ளது.

உள்ளரங்குகளில் 2ஜி

இவ்விதியானது கட்டடத்திற்குள் எவர் எங்கு சென்றாலும் அவர் மகுடநுண்ணி (கோவிட்19) நோய்த்தொற்றுத் தடுப்பூசி முழுமையாக இட்டுக்கொண்டவராக அல்லது நோயில் இருந்து முழுiயாக குணம் அடைந்தவராக இருக்க வேண்டும்.

உள்ளரங்கு முழுவதும் எப்போதும் முகவுறை அணிந்திருக்க வேண்டும் என்ற விதியை கடந்த சந்திப்பில் அறிவித்திருந்தது சுவிஸ் அரசு.

வழமையாக இவ்விதி சுறவத்திங்கள் (தை) 24ம் நாளிற்குப் பிறகு நீக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் இவ்விதி மீனத்திங்கள் (மார்ச்) 31ம் நாள்வரை நீடிக்கப்படுகின்றது.

தனிநபர்கள் ஒன்றுகூடுவதற்கும் வரையறை வழங்கப்பட்டிருந்தது. இக்கட்டுப்பாடும் 31.03.2022 வரை நீடிக்கப்படலாம்.

தடுப்பூசிச் சான்றிதழ்

வழமையாக தடுப்பூசியினை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு 12 மாதங்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் செல்லுபடியாகும் காலத்தை 365 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதாவது 9 மாதமாக மாற்ற கலந்துரையாடப்பட்டுவருகின்றது.

இம்முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது 01. 02. 2022 முதல் நடைமுறைக்கு வரும்.

மாநிலங்களுடன் கலந்தாய்வு

சுவிற்சர்லாந்து நடுவனரசின் இம்முன்மொழிவுகள் யாவும் மாநிலங்களின் கருத்தினை அறிவதற்கு மாநில அரசுகளிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

17. 01. 2022 வரை மாநில அரசுகள் தமது எண்ணத்தை கருத்தை நடுவனரசிற்கு அளிக்கலாம். அதன்பின் முடிந்தமுடிவு நடுவனரசால் எட்டப்படும். 26. 01. 2022 புதன்கிழமை சுவிற்சர்லாந்து அரசு தனது முடிவினை அறிவிக்கும்.

ஏன் முடக்கம் இல்லை?

சுவிற்சர்லாந்தின் அதிபர் திரு. இக்னாச்சியோ காசிஸ் மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு. அலான் பெர்சே இருவரிடமும் சுவிற்சர்லாந்து அரசு புதிய முடக்கத்தினை தவிர்ப்பதும், தனிமைப்படுத்தும் காலத்தை தளர்த்துவதும் நாடுமுழுவதும் நோய்பரவி அதன் ஊடாக முழு மக்களையும் நோய் ஏதிர்ப்பு கொண்டவர்களாக மாற்றுவதா என ஊடகவியலாளரால் வினாவப்பட்டது.

இதற்கு சுவிஸ் அதிபரும் நலவாழ்வுத்துறை அமைச்சரும் கூட்டாக இவ்வாறு பதில் அளித்தனர்:

«நாம் அப்படி எண்ணி இம்முடிவினை எட்டவில்லை. எமது மருத்துவமனைகள் தமது சேவையை தடங்கலின்றி ஆற்றுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி இட்டுக்கொண்டதன் பயன் தொற்றுக்கு உட்பட்டவர்கள் தொகை அதிகரித்தபோதும், அதன் அளவிற்கு நோயாளர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய வேண்டி வரவில்லை. எமது கட்டுப்பாடுகள் அனைவரும் ஒரே நேரத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாக நாடு முழு முடக்கம் காண்பதை தவிர்ப்பதாகும். இவ் இலக்கினை நாம் வெற்றியாக அடைந்து வருகின்றோம். ஆகவே புது முடக்கத்தை நாம் அறிவிக்கவும் இல்லை, பெருந்தளர்வுகளையும் செய்யவும் இல்லை» என்றனர்.
சுவிஸ் அதிபர் மேலும் தொடர்கையில்:

«நோய்களுக்கு மருந்தின் அளவுப்பரிமாணம் குறைந்தால், அது பயன் அளிக்காது, வீரியத்தை கணக்கின்றிக்கூட்டினால் இறக்கவும் நேரும். மருந்தை அளவாக நற்பலன் வழங்கும் வகையில் அளிக்க வேண்டும். இதுபோல் எமது நடவடிக்கைகள் பக்க இழப்புக்களைக் குறைத்துக்கொண்டு, புதிய தற்சூழலிற்கு ஏற்ப முடிவுகள் எட்டப்படு வேண்டும். கடந்த காலத்து பட்டறிவுகளைக்கொண்டு நாம் புதிய முடிவுகளை எடுக்கின்றோம். தற்போது 80 அகவை அடைந்தவர்களில் 97 வீதமானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் விளங்குகின்றனர். அதுபோல் இளைய வயதினரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ளனர். இவ்வேளை தற்போதைய சூழலில் நோய்நுண்ணியும் திருபு வேறுபாடுகண்டு வருகின்றது. இதன் திருபு இதுவரையான ஆய்வுகளில் பேரிடர் நேராத வகையாக இனங்காணப்பட்டுள்ளது. ஆகவே சூழலிற்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்கிறோம் என்றார்» சுவிஸ் அதிபர்.

தைபிறக்க வழிபிறக்குமா? 26. 01. 2022 சுவிஸ் அரசின் புதிய அறிவுப்பு வரும்போது தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்

நன்றி சிவமகிழினி