தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம்; பிரதான சந்தேகநபரிடம் 72 மணிநேர விசாரணைக்கு அனுமதி!

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த குண்டு 13 வயது சிறுவன் ஒருவனின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பின்னர் குறித்த சிறுவன் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து, அவரிடம் நீதவான் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அத்தோடு, நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய குறித்த கைக்குண்டு நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.